சுமைதூக்கும் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழப்பு
ஜெயங்கொண்டம் அருகே சுமைதூக்கும் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்தார்.;
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் மன்மத சுவாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் சுதாகர். மூட்டை தூக்கும் தொழிலாளி. நேற்று பணி முடித்துவிட்டு வந்தவர் வீடு திரும்பவில்லை.
இதனிடையே, கல்லாத்தூர் அரசு மதுபான கடை அருகே சுதாகர், தலையில் பலத்த ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அவ்வழியே சென்ற பொதுமக்கள் இதுபற்றி உறவினர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுதாகரின் உடலில் ரத்த காயங்களுடன் இருப்பதால் முன்விரோதம் காரணமாக குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.