தா.பழூர் விஸ்வநாதர் கோவிலில் கந்தசஷ்டி விழா துவக்கம்
9-ந் தேதி மாலையில் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடக்கிறது.
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் முருகப் பெருமான் வள்ளி, தேவசேனா சமேதராக மயில் வாகனத்தில் ஒரு காலை மடித்து அமர்ந்தவாறு கையில் வில் ஏந்தியபடி சத்ரு சம்ஹார மூர்த்தி திருக்கோலத்தில் காட்சி தந்து அருள்பாலிக்கிறார். இங்கு கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி சிறப்பு அபிஷேக, ஆராதனைகளோடு கந்த சஷ்டி விழா தொடங்கியது. விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் மாலையில் வில்லேந்தி வேலவருக்கும் உற்சவ மூர்த்தியாக விளங்கும் வள்ளி, தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.
விழாவின் 6-ம் நாளான வருகிற 9-ந் தேதி காலை வில்லேந்தி வேலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. மாலையில் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து சூரனை வதம் செய்யும் சூர சம்ஹார நிகழ்ச்சியும் நடக்கிறது. 7-ம் நாளான 10-ந் தேதி கல்யாண சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணமும், 8-ம் நாளான 11-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும் சிறப்பாக நடைபெற உள்ளது.