டீக்கடை தொழிலாளி வீட்டில் 30 சவரன் நகை ரூ. 70 ஆயிரம் பணம் திருட்டு
வீட்டில் யாரும் இல்லாத தெரிந்து கொண்ட மர்ம நபர்கள், நேற்று நள்ளிரவில், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து திருடியுள்ளனர்.;
அரியலூர் மாவட்டம் கோடாலிகருப்பூரில் திருட்டு சம்பவம் நடந்த டீக்கடை தொழிலாளியின் வீட்டை பார்வையிட்ட போலீஸார்
ஜெயங்கொண்டம் அருகே டீக்கடை தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை மற்றும் 70 ஆயிரம் ரொக்கப் பணம், ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கோடாலிகருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவர் ஜெயங்கொண்டம் சந்நிதி தெருவில் டீக்கடை தொழில் நடத்தி வருகிறார். தொழில் நிமித்தம் காரணமாக அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார். கோடாலிகருப்பூரில் உள்ள அவரது சொந்த வீட்டில், அவரது சகோதரியான விமலா தற்சமயம் வசித்து வருகிறார். இடைக்கட்டு கிராமத்தில் தனது பேரப்பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லை என்று வந்த தகவலை அடுத்து, அவரைப் பார்ப்பதற்காக வீட்டை நேற்று முன்தினம் பூட்டிவிட்டு, தனது குடும்பத்துடன் விமலா சென்று விட்டதாக கூறப்படுகிறது.
விமலாவின் வீட்டில் யாரும் இல்லாத தெரிந்து கொண்ட மர்ம நபர்கள், நேற்று நள்ளிரவில் உள்ளே புகுந்து, வீட்டின் பின்பக்க கதவை கடப்பாறையால் உடைத்து, பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகைகள் மற்றும் 70 ஆயிரம் ரொக்கப்பணம், ஒன்றரை கிலோ மதிப்புள்ள வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதேபோன்று கொள்ளை நடந்த பக்கத்து வீட்டில் வசிக்கும் கௌரி என்பவரது வீட்டிலும், மர்ம நபர்கள் வீட்டில் கொள்ளையடிப்பதற்கு முயற்சி செய்தனர். அப்போது வீட்டில் இருந்த கௌரி சத்தம் போட்டு, லைட்டை போட்டதும் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கொள்ளை நடந்த வீட்டில் விசாரணை நடத்தினர். கைரேகை மற்றும் தடவியல் நிபுணர்கள், மோப்பநாய் ஆகியவை வரவழைக்கப்பட்டு, தீவிர சோதனை மேற்கொண்டனர். தா.பழூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.