ஜெயங்கொண்டம் அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் பலி: பிரேத பரிசோதனைக்கு உடலை தரமறுத்து போராட்டம்
ஜெயங்கொண்டம் அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் இறந்தார். பிரேத பரிசோதனைக்கு உடலை தர மறுத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்து தா.பழூர் அருகே உள்ள பொற்பதிந்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிகாமணி. இவரது மனைவி பூபதி. இந்த தம்பதியருக்கு பிரகாஷ் வயது(7), செந்தில் வயது(6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
தம்பதிகள் இருவரும் நேற்று காலை காட்டுப் பிள்ளையார் கோயில் அருகே உள்ள அவர்களது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அருகில் உள்ள குட்டையில் பிரகாஷ் மற்றும் செந்தில் இருவரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் செந்தில் தண்ணீரில் மூழ்கினான்.
இதை பார்த்த பிரகாஷ் அழுது கூச்சலிட்டு பெற்றோரை அழைத்து உள்ளார். உடன் வேலை செய்து கொண்டிருந்த சிகாமணி, பூபதி மற்றும் அருகில் உள்ளவர்களும் ஓடிவந்து குட்டையில் இறங்கி செந்திலை தேடினர். சிறிது நேரத்திற்கு பிறகு செந்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர். அப்போது கொரோனா காலமாக இருப்பதால் உடலை எடுத்துச் சென்றால் மீண்டும் ஒப்படைக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் சிறுவனின் உடலை போலீசாரிடம் ஒப்படைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் இரவு 9 மணி வரை சிறுவனின் உடலை ஒப்படைக்க கிராம மக்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.
இதுகுறித்து செய்தி அறிந்த ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பிரேத பரிசோதனை முடிந்து நிச்சயமாக சிறுவனின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இரவு 10 மணிக்கு மேல் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பொற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.