ஜெயங்கொண்டம் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ரூ.292 தினக்கூலி வழங்க கோரி ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன் துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஜெயங்கொண்டம் நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் நிரந்தர தொழிலாளர்களை விட ஒப்பந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகமாகும். இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் நகராட்சியில் வேலை செய்யக்கூடிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக 292 ரூபாய் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மதிக்காமல் பழைய ஊதியமான 242 ரூபாய் மட்டுமே தினக்கூலியாக வழங்கப்பட்டு வருவது ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
எனவே மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட தினக்கூலியாக 292 ரூபாயை உடனே வழங்க வேண்டும் மேலும் 54 மாதத்திற்கான நிலுவை தொகையையும் வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து பேட்டியளித்த ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தண்டபாணி, இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆணையரிடம் மனு அளித்துள்ளோம். மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையென்றால் நகராட்சி தொழிலாளர்கள் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்தப்படும் என தெரிவித்தார்.