ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் மருத்துவர் இல்லாததால் அவதி
ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் குழந்தைகள் நல மருத்துவர் இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனையில் குழந்தைக்கு அதிகப்படியான வயிற்றுப்போக்கு காரணமாக கங்கைகொண்ட சோழபுரத்தை சேர்ந்த ராஜா விமலா தம்பதியினர் தங்களது குழந்தையை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர். அப்போது குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர் பணியில் இல்லை என்றும் முடநீக்கியல் மருத்துவர் மட்டுமே பணியில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திலீபன் என்பவரின் தம்பி குழந்தைக்கு இரண்டு நாட்களாக அதிகப்படியான வயிற்றுப்போக்கு உள்ளதால் குழந்தை சிறப்பு மருத்துவரை பார்க்க வேண்டும் என வற்புறுத்தியதால் மருத்துவமனையில் இருந்த பணியாளர்கள் இவரை பல இடங்களுக்கு சென்று வரும் வகையில் அலைகழித்துள்ளனர். மேலும் பணியில் இருந்த முடநீக்கியல் மருத்துவர் உரிய சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதேபோல் பல பெற்றோர்கள் குழந்தைகளுக்கு உரிய முறையான சிகிச்சை கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதே நிலைமை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து நேரங்களிலும் குழந்தைகள் மருத்துவம் பார்க்க மருத்துவர்கள் சிறப்பு பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.