ஜெயங்கொண்டம் நகராட்சியில் தி.மு.க.வை சேர்ந்த கணவன் மனைவி வெற்றி
ஜெயங்கொண்டம் நகராட்சி தேர்தலில் தி.மு.க. நகரச்செயலாளர் மற்றும் அவரது மனைவி இருவரும் வார்டுகளில் வெற்றி பெற்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட நகரச்செயலாளர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஆகிய இருவரும் வெவ்வேறு வார்டுகளில் வெற்றிப்பெற்றுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் 21 வார்டு கவுன்சிலர்களுக்கு 38 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 13502 ஆண்வாக்காளர்கள் மற்றும் 14540 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 28042 வாக்காளர்களில், 10211 ஆண் வாக்காளர்கள் மற்றும் 11224 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 21435 வாக்காளர்கள் வாக்களித்தனர். 76.44 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மூன்று மேஜைகளில் 7 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டது.
இதில் ஜெயங்கொண்டம் நகராட்சி 21 வார்டுகளில், தி.மு..க 9 இடங்களையும், அ.தி.மு.க. 4 இடங்களையும், வி.சி.க. 2 இடங்களையும், ம.தி.மு..க 1 இடங்களையும், பா.ம.க. 4 இடங்களையும், சுயேச்சை 1 இடத்தையும் பெற்றுள்ளது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஜெயங்கொண்டம் நகராட்சியை தி.மு.க. கைப்பற்றுகிறது.
இந்நிலையில் திமுக ஜெயங்கொண்டம் நகர செயலாளர் கருணாநிதி நகராட்சி தேர்தலில் 8வது வார்டில் வெற்றி பெற்றார். அவரது மனைவி லாவண்யா தி.மு.க. ஜெயங்கொண்டம் நகராட்சி 19 வது வார்டில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.