அரியலூர்: வீட்டு உபயோக பொருட்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டவரால் பரபரப்பு

ஆண்டிமடம் நான்கு ரோட்டில் வீட்டு உபயோகப் பொருட்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தியவரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-01-06 10:10 GMT

ஜெயங்கொண்டம் அருகே வீட்டு உபயோக பொருட்களுடன் போராட்டம் நடத்தியவரால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர் மாவட்டம் நெட்டலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி ஜுலியானா ஷீலா தனக்கு சொந்தமான வீட்டுடன் கூடிய 2 செண்ட் மனைக்கு நான்கு லட்ச ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு பட்டணம் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த அருள்சாமிக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு நம்பிக்கை கிரயம் எழுதிக் கொடுத்துள்ளார். கிரையம் பெற்ற அருள்சாமி அந்த வீட்டில் குடியிருந்தார்.

மீண்டும் வட்டியுடன் பணத்தை கொடுத்து அருள்சாமி கிரயத்தை திரும்ப பெற்றுக் கொள்ளாததால் ஜுலியானா ஷீலா அதே பகுதியை சேர்ந்த துரைசாமி என்பவரிடம் 17 லட்சம் பெற்றுக்கொண்டு தனது வீட்டை விற்று விட்டதாக தெரிய வருகிறது.

கிரையம் வாங்கிய துரைசாமி தான் வாங்கிய இடத்தில் குடியிருக்கும் அருள்சாமி வீட்டிற்கு சென்று தான் வீட்டுடன் கூடிய அந்த மனையை கிரயம் பெற்று விட்டதாகவும் விரைவில் வீட்டை காலி செய்யும்படி சில மாதங்களுக்கு முன்பு கூறி சென்றுள்ளார்.

இன்று அருள்சாமி குடியிருக்கும் வீட்டிற்கு வந்த துரைசாமி பலமுறை கூறியும் வீட்டை காலி பண்ணாததால் வீட்டுக்குள் புகுந்து உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தையும் வெளியே கொண்டு வந்து வைத்துவிட்டு வீட்டை பூட்டி விட்டு சாவியை எடுத்துச் சென்றுவிட்டார்.

இதனால் நிலைகுலைந்து போன அருள்சாமி ஆண்டிமடம் நான்கு ரோட்டில் வீட்டு உபயோகப் பொருட்களுடன் தனது குடும்பத்துடனும் சாலை மறியலில் ஈடுபட்டார்.

இதனை அறிந்த ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடம் வந்து அருள்சாமி குடும்பத்தாருடன் பேசி பொருட்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு காவல் நிலையம் சென்று விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

Tags:    

Similar News