ஆண்டிமடம் அருகே நகைக்காக மூதாட்டி கொலை
ஆண்டிமடம் அருகே மூதாட்டி அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து, ஓடை தண்ணீரில் மூழ்கடித்து கொலை.;
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே மூதாட்டி அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து, ஓடை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
ஆண்டிமடம் அருகேயுள்ள முன்னூரான்காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காத்தாயி(70). அவர், அப்பகுதியில் உள்ள தனது வயலில் நிலக்கடலை பயிரிட்டுள்ளார். நேற்று வயலுக்கு சென்றவர் மாலை வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, அருகில் உள்ள ஓடை தண்ணீரில் மூழ்கிய நிலையில் காத்தாயி இறந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீஸார் வந்த பார்த்ததில், மூதாட்டி அணிந்திருந்த தோடுகள், மூக்குத்தி ஆகியவற்றை மர்மநபர்கள் பறித்துச் சென்றதும், இதனால் காது மற்றும் மூக்கில் காயம் உள்ளதும் தெரியவந்தது. மேலும், மூதாட்டியை ஓடை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்து விட்டு தப்பிச் சென்றதும் தெரியவந்தது. ஆண்டிமடம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.