தா.பழூர் அரசு பள்ளி முன் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதாக புகார்
தா.பழூர் அரசு பள்ளி முன் இறைச்சி கழிவு கொட்டப்படுவதாக வந்த புகாரையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் பல்வேறு இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் இறைச்சிகளின் கழிவுகள் பள்ளி முன்பே கொட்டபடுவதாகவும், இதனால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் எழுந்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி தலைமையிலான அதிகாரிகள் தா.பழூர் கடைவீதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது உரிமம் இல்லாமல் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 5 இறைச்சிக் கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் இறைச்சி கடைகள் சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும், பள்ளி முன்பு கழிவுகள் கொட்ட கூடாது என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் அறிவுரை வழங்கி எச்சரித்தனர்.
இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு அலுவலர் ரத்தினம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல் கலந்து கொண்டனர்.