ஆண்டிமடம் அருகே கல்லூரி மாணவியை கடத்திய கோகுல் ராஜ் கைது
ஆண்டிமடம் அருகே ஆசைவார்த்தைகள் கூறி கல்லூரி மாணவியை கடத்திய கோகுல் ராஜ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.;
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சிலம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவது மகன் கோகுல்ராஜ் (22). இவர் பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் அதே பகுதியை சேர்ந்த பி.காம் படித்து வரும் 17 வயது சிறுமியை காதலித்து வந்த நிலையில் கடந்த 2-ஆம் தேதி சிறுமியை கடத்திச்சென்று ஆசை வார்த்தைகள் கூறி சேலத்தில் உள்ள ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். பின்னர் கோகுல்ராஜ் அங்கிருந்து சிறுமியை சண்டிகருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் நன்னடத்தை அலுவலர் கார்த்திகேயனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு சென்று விசாரணை செய்து புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி, சண்டிகரில் இருந்த கோகுல்ராஜை போனில் தொடர்பு கொண்டு இருவரும் வரவழைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் கடந்த 8-ந் தேதி சொந்த ஊரான சிலம்பூருக்கு வந்தனர். இதையடுத்து அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, வழக்குப்பதிந்து போக்சோ சட்டத்தில் கோகுல்ராஜை கைது செய்து விசாரித்து வருகிறார்.
கோகுல்ராஜ் ஆர்.எஸ். மாத்தூரில் கல்லூரியில் பி.எஸ்சி விலங்கியல் பாடம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.சிறுமி திட்டக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.