ஆண்டிமடம் அருகே கஞ்சா வைத்திருந்தவர்களை கைது செய்த போலீஸ்
ஆண்டிமடம் அருகே கஞ்சா வைத்திருந்த நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.;
கைதான நான்கு பேரில் இருவர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வரதராஜன்பேட்டை பேருந்து நிலையத்தில் கஞ்சா இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ஆண்டிமடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிச்சைமணி தலைமையிலான காவலர்கள் அங்கு சென்று சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த நான்கு நபர்களை பிடிக்க முயன்றனர். நான்கு பேரும் போலீஸை பார்த்தவுடன் கையில் வைத்திருந்த கஞ்சா பொட்டலங்களை மறைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்ற போது அவர்களை வளைத்து பிடித்தனர்.
கடலூர் மாவட்டம் கண்டியங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பெனிட்டோ, ஜெயங்கொண்டம் இலையூர் பகுதியைச் சேர்ந்த வினோத், வரதராஜன்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம், கடலூர் மாவட்டம் பழைய அந்தோணியார்புரம் பகுதியைச் சேர்ந்த அருண் பிரேம்குமார் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களை சோதனை செய்ததில் அவர்களிடம் இருந்த சுமார் 24 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் டூவீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.