வண்ணமய மின்னொளியில் ஒளிரும் கங்கை கொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில்
கொரோனா விழிப்புணர்விற்காக கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் மின்னொளியில் ஒளிரும் வகையில் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
இந்திய அளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மத்தியஅரசு மிகுந்த கவனம் செலுத்தியது. இதனையடுத்து இந்தியா முழுவதும் தற்போது கொரானா தடுப்பூசி 96கோடிக்குமேல் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் விதமாக இந்திய அளவில் பிரசித்திபெற்ற 100 இடங்களை தேர்வு செய்து அக்கட்டிடங்களை வண்ணமயமாக மின்ஒளியில் ஒளிரச்செய்து பொதுமக்களை கவர மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய தொல்லியல் மற்றும் பாதுகாப்பு துறையின் சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் சிறப்பு ஒளி அமைப்பு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அந்த 100இடங்களில் ஒன்றாக அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலும் தேர்வு செய்யப்பட்டது. இதனையடுத்து மத்திய தொல்லியல் மற்றும் பாதுகாப்பு துறையின் சார்பாக சிறப்பு ஒளி அமைப்பு பிரகதீஸ்வரர் ஆலயம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது.
கண்ணைக்கவரும் வண்ணங்களில் ஒளிரும் பிரகதீஸ்வரர் ஆலயம் பொதுமக்களையும் பக்தர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.இந்நிலையில் தமிழகஅரசு வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் பொதுமக்கள் கோவில்களுக்கு வந்து தரிசனம் செய்ய விதிக்கப்பட்ட தடையை இன்று நீக்கியுள்ளது.
இதனால் நாளைமுதல் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலுக்கு வருகைதரும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் நிலையில் வண்ணமயமான இந்த ஒளிஅமைப்பு அனைவரிடமும் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.