ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் விழுந்த பசுமாட்டை தீயணைப்புதுறையினர் மீட்பு
ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமணல் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியம்மாள். இவருக்கு சொந்தமான வயலில் கிணறு ஒன்று உள்ளது. தற்போது அந்த கிணறு பயன்பாடு இன்றி இருந்துள்ளது.
இந்நிலையில் அங்கே மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு கிணற்றில் விழுந்துள்ளது. மாடு காணமல் போனதாக என்னி தேடும்போது 20 அடி ஆழம் உள்ள கிணற்றில் குறைந்த அளவு தண்ணீரில் சிக்கி கொண்டு இருந்தது.
இதனை பார்த்த பழனியம்மாள் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து, உடனே ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் உதவியுடன் கயிறு கட்டி பசுமாட்டை உயிருடன் மீட்டனர். தீயணைப்பு வீரர்களின் இத்தகைய செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.