அரியலூர் அருகே கடன் தொல்லையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை

அரியலூர் அருகே, கடன் தொல்லையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-09-28 06:23 GMT

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே, இடையார்ஏந்தலை சேர்ந்தவர் சுப்ரமணியன் (65). விவசாயி. இவர் கடந்த ஆண்டு உடையார்பாளையத்தை சேர்ந்த செந்தில் என்பவருக்கு, மேலகுடியிருப்பை சேர்ந்த நடராஜன் என்பவரிடம் வட்டிக்கு கடன் வாங்கி தந்துள்ளார்.

கடன் பெற்ற செந்தில்,  சரிவர வட்டி கட்டவில்லை என கூறப்படுகிறது. இதனால், பணம் கொடுத்தவர், சுப்பிரமணியத்திடம் பணத்தை திருப்பி செலுத்தும்படி கட்டாயப்படுத்தி வந்துள்ளனர். இதனிடையே, செந்தில் தலைமறைவானது அறிந்து, சுப்பிரமணியன் அதிர்ச்சியடைந்தார்.

இதனால், கடந்த 21ஆம் தேதி வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு, சுப்பிரமணி நேற்று  உயிரிழந்தார்.

இதனிடையே, கந்துவட்டி கேட்டு தொல்லை கொடுத்ததால் சுப்பிரமணி தற்கொலை செய்து கொண்டதாகக்கூறி,  அவரது உடலை வாங்க மறுத்து, உடையார்பாளையத்தில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கலைக்கதிரவன், சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர். உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News