பொது விநியோகத் திட்டத்திற்கு என தனி துறை உருவாக்கப்பட வேண்டும்
மரணமடைந்த முன்களப்பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட வேண்டும்
பொது விநியோகத் திட்டத்திற்கு என தனி துறை உருவாக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
மீன்சுருட்டியில் செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் தமிழக அரசு பணியாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பொங்கல் போனஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனை தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் வரவேற்கிறது. அதே சமயத்தில் போனஸ் அறிவிப்பிலாவது அனைத்துப் பணியாளர்களும் ஒரே மாதிரியாக நடத்தப்பட வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் 3 ஆயிரம் ரூபாய் போனஸ் என்பதை "பி" பிரிவு பணியாளர்களுக்கு நிரந்தர ஊதியமில்லா பணியாளர்களுக்கும், வழங்கிட வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாகும்.
அது மட்டுமல்ல இன்று தூய்மைப் காவலர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது இல்லை. ஒரே துறையில் பணியாற்றக்கூடிய துப்புரவு பணியாளர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது. ஆனால் தூய்மை காவலர்களுக்கு போனஸ் வழங்கப்படுவதில்லை. எனவே அனைத்து வகையான தூய்மை பணியாளர்களுக்கும் போனஸ் வழங்கப்பட வேண்டும், டாஸ்மாக் வரவு, செலவு வரி உள்ளிட்டவை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பொது விநியோகத் திட்டத்திற்கு என தனி துறை உருவாக்கப்பட வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகளுக்காக எங்களது சங்கத்தை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் அவர்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.
தமிழகத்தில் உள்ள நிரந்தர ஊதிய விகிதம் இல்லாத பணியாளர்களின் பிரச்னைகளுக்கும் தீர்வு காணவேண்டும் என்பதும் எங்களது கோரிக்கையாக இருந்து வருகிறது. சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றிவரும் சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஊராட்சி செயலாளர்கள் ஆதிதிராவிட நலத்துறை பிற்பட்டோர் நலத்துறை ஆகியவற்றில் பணியாற்றும் உதவி பணியாளர்கள் அரசு துறைகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆகியவர்களுக்கு ஊதிய விகிதம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்னும் கோரிக்கை நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வருகிறது.
இது போன்ற கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி நிறைவேற்ற முன்வர வேண்டும். கொரோனா தொற்று காரணமாக, நாங்கள்வருகின்ற ஜனவரி. 4 -ஆம் தேதி அன்று நடத்துவதாக அறிவித்திருந்த தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம். நோய் தொற்று பரவும் காலத்தில் பல்வேறு துறைகளில் அவசரஅவசரமாக அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள முன்கள பணியாளர்களாக தற்காலிக அடிப்படையில் ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டனர். அவர்கள் எந்தத் துறையில் பணி அமர்த்தப்பட்டு இருந்தாலும் அந்த துறையில் அவர்களுக்கு ஊதிய விகிதம் நிர்ணயம் செய்து பணி நிரந்தரம் செய்யப்படவேண்டும்.
கோடை காலத்தில் முன் களப்பணியாளர்கள் ஆக பணியாற்றி மரணமடைந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்ட இழப்பீடுகள் உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட வேண்டும் என்றார் அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன்.