கங்கைகொண்டசோழபுரம் அகழ்வாராய்ச்சி பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்
மாளிகைமேடு அகழ்வாராய்ச்சி பணிகள் ஊரடங்கு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது தொல்லியல்துறை தகவல்.;
அரியலூர் : 15 நாள் முழுஊரடங்கை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் அருகே உள்ள மாளிகைமேடு அகழ்வாராய்ச்சி பணிகள் ஊரடங்கு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தொல்லியல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2வது அலை கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக எட்டு மாதங்களுக்கு பிறகு தமிழக அரசு 15 நாள் முழுஊரடங்கை அறிவித்துள்ளது. இன்று தொடங்கி 24ம் தேதி வரை தளர்வுகள் அற்ற ஊரடங்கு தொடங்கியுள்ளது. இதனையொட்டி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்து கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள மாளிகை மேடு பகுதியில் தமிழகத் தொல்லியல் துறை சார்பில் 4ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டு, கடந்தமாதம் முதல் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டு அகழாய்வு பணிகள் நடைபெறுகின்றது.
இந்நிலையில் தற்போதைய தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு காரணமாக மாளிகைமேட்டில் நடைபெற்றுவரும் அகழாய்வு பணிகள் ஊரடங்கு காலம் முடிந்து மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அகழாய்வு பணிகள் நடைபெறும் மாளிகை மேடு பகுதியானது தற்போது வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.