அரியலூர் வேலைவாய்ப்பு முகாமில் அமைச்சர் சிவசங்கர் வழங்கிய பணி ஆணை
அரியலூர் மாவட்டத்தில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் பணி ஆணை வழங்கினார்.;
அரியலூர் மாவட்டம், தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன், மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தனர்.
இம்முகாமில் நியமன ஆணைகளை வழங்கி அமைச்சர் பேசும்போது
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அவர்களின் தகுதிகளுக்கேற்ப வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும், பின்தங்கிய பகுதிகளில் தொழில் துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் புதிய தொழில்பேட்டைகளையும் உருவாக்கி வருகிறார்கள். அதன்படி, ஓசூரில் மின்னணு இருசக்கர வாகனத்திற்கான தொழிற்சாலை தொடங்குவதற்கான அனுமதியும், விழுப்புரம் மாவட்டத்தில் புதிய தொழில்பேட்டைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
பள்ளி, பட்டய மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் அதிக அளவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, அரசு வேலைகளுக்காக காத்துக்கொண்டிருக்கும் இச்சூழ்நிலையில் மாணவர்கள் அனைவரும் தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இதுபோன்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு வேலைகளை பெற்று தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டு தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 93 தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு சுமார் 11 மாற்றுத்திறனாளிகள் உட்பட 749 நபர்களுக்கு பணி ஆணைகளும், 658 நபர்கள் முதற்கட்ட தேர்விற்கான ஆணைகளும், இந்நிகழ்ச்சியில் 13 திறன் பயிற்றுநர்கள் கலந்துகொண்டு 32 நபர்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டது.
பின்னர், மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் 17 நபர்களுக்கு தலா ரூ.76,000 - வீதம் ரூ.13 இலட்சத்து 500 மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டது.
இம்முகாமில், திட்ட அலுவலர் (மகளிர்திட்டம்) சிவக்குமார், உடையார்பாளையம் கோட்டாட்சியர் அமர்நாத், இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை) மு.சந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொ) மூ.வினோத்குமார், இளைநிலை வேலைவாய்ப்பு அலுவலர் அண்ணாதுரை, மீனாட்சி இராசாமி கல்லூரி நிறுவனங்களின் தாளாளர் ரகுநாதன் மற்றும் அலுவலர்கள், ஏராளமான பட்டதாரி இளைஞர்கள் கலந்துகொண்டார்கள்.