கோவில் திருவிழாவில் தகராறு: வாலிபர் கைதை கண்டித்து சாலை மறியல்
கோவில் திருவிழாவில் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியல்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் கண்ணனூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தெப்ப திருவிழாவையொட்டி கடந்த 23-ம் தேதி மாரியம்மன் வீதியுலா நடந்தது. அப்போது உடையார்பாளையம் அஞ்சலகம் எதிரே உடையார்பாளையத்தை சேர்ந்த வாலிபர்களான இளங்கோவன், இளவரசன், விக்னேஷ், அஜித் குமார், பழனி, பரணி, தமிழரசன், வீராசாமி, வீரமணி, சரவணன் ஆகியோர் கோஷமிட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த உடையார்பாளையம் வடக்கு காலனியை சேர்ந்த பாஸ்கர், ஆகாஷ் ஆகியோரிடம் இளவரசன் உள்ளிட்ட 10 பேரும் தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பாஸ்கர், ஆகாஷ், அபிமன்யு, தினேஷ், மகேஷ் பாபு ஆகியோர் சேர்ந்து இளங்கோவன், இளவரசன் தரப்பினரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, இருதரப்பை சேர்ந்த 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இளவரசனை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ஒரு தலைபட்சமாக போலீசார் செயல்படுவதாக இளவரசனுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு போலீஸ் நிலையம் அருகே உடையார்பாளையம்-பரணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.