அரியலூர் மாளிகைமேடு அகழ்வாராய்ச்சியில் பழங்கால மண்பானை கண்டுபிடிப்பு
அரியலூர் மாவட்டம் மாளிகைமேடு அகல்வாராய்ச்சியில் பழங்கால மண்பானை மற்றும் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.;
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் அருகே மாளிகைமேடு தொல்லியல் தளத்தில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியினை கடந்த மாதம் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அகழ்வாராய்ச்சி நடந்து வரும் நிலையில் தற்போது முதல் முறையாக 25 செ.மீ உயரமும், 12.5 செ.மீ அகலம் கொண்ட பழங்காலத்து மண்பானை - 1-ம், மண்ணாலான கொண்டி மூக்கு மற்றும் 30 அடுக்கு கொண்ட செங்கல் சுவரும் கண்டெடுக்கப்பட்டது. 25 செ.மீ உயரம் மற்றும் 12.5 செ.மீ அகலம் கொண்ட இந்த பானையானது ஒரு பகுதி சிறிது உடைந்த நிலையில் காணப்பட்டது. தரை தளத்தில் இருந்து 18 செ.மீ ஆழத்தில் கிடைத்துள்ளது.
கல்வெட்டு ஆதாரங்களின் உதவியுடன், மாளிகைமேட்டில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட அகழ்வாராய்ச்சியில், செங்கல் அமைப்பு மற்றும் ஏராளமான அலங்கரிக்கப்பட்ட கூரை ஓடுகள் வடிவில் அரச அரண்மனையின் கட்டமைப்பு எச்சங்கள் கண்டறியப்பட்டன. கடந்த 4-ம் தேதி செப்பு காப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது அடுத்து தற்போது முழுமையான மண்பானை கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுவரை தளத்தில் கிடைத்த பழங்கால பொருட்களில் செப்பு நாணயங்கள் மற்றும் செம்பு பொருட்கள், இரும்பு ஆணிகள், கண்ணாடி மணிகள் மற்றும் வளையல்கள், அலங்கரிக்கப்பட்ட கற்கள் மற்றும் சீன பொருட்கள் ஆகியவை அடங்கும்.