தர்மசமுத்திரம் பகுதி மக்கள் கருப்புக் கொடியை ஏந்தி ஆர்ப்பாட்டம்

வீடுகளை இடிக்கப்படுவதை கண்டித்து பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகள் மற்றும் தெருக்களில் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்.

Update: 2022-05-24 11:15 GMT

தர்மசமுத்திரம் பகுதி மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கருப்புக் கொடியை கையில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள தர்மசமுத்திரம் பகுதியில் செல்லக்கூடிய செங்கால் ஓடைக்கு அருகில் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகின்றனர். ஓடையின் நீர்வழியை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருப்பதாக கூறி அப்பகுதியில் உள்ள 40 வீடுகளுக்கு வருவாய்த்துறை மூலம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு வீடுகளை காலி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

ஓடைக்கும் குடியிருப்புக்கும் சுமார் 500 மீட்டர் இடைவெளி உள்ளது. நீர்வழியை ஆக்கிரமித்து வீடு கட்டவில்லை. எனவே வீடுகளை இடிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். எனினும் இதனை செவிகொடுத்து கேட்காத அதிகாரிகள் வீடுகளை காலி செய்யவில்லையென்றால் வீடுகளை இடிப்போம் என கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் நீர்வழி ஆக்கிரமிப்பு என்று கூறி வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாற்று இடம் வழங்க வலியுறுத்தியும், அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கருப்புக் கொடியை கையில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் குடியிருக்கும் வீடுகளை இடிப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் பட்டா வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News