புதிய பைக் கேட்டு சகோதரர்கள் மோதல்; தலையில் அடிபட்டு தம்பி உயிரிழப்பு

புதிதாக பைக் ஒன்றை வாங்கித் தர வேண்டி குடிபோதையில் சகோதரர்களிடையே ஏற்பட்ட தகராறில் தம்பி உயிரிழந்தார்.

Update: 2021-08-04 06:49 GMT

 குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் உயிரிழந்த வெங்கடேசன்.


அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு இரண்டு மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.

இவரது இளைய மகன் வெங்கடேசன் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும் இவரது அண்ணன் குமார்(எ)சிவக்குமார் என்பவருக்கும் இடையே, குடிபோதையில் தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த குமார், தனது தம்பி வெங்கடேசனை கீழே தள்ளியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வெங்கடேசனுக்கு தலையில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக வெங்கடேசன் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி  வெங்கடேசன் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெங்கடேசன் தனக்கு இருசக்கரம் வாகனம் ஒன்றை புதிதாக வாங்கி தர வேண்டி குடும்பத்தில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அண்ணனே தம்பியை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News