அரியலூர் மாவட்டத்தில் 300 முகாம்களில் கொரோனா தடுப்பூசி
அரியலூர் மாவட்டத்தில் 300 முகாம்களில் 4-ம்கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனை கலெக்டர் ஆய்வுசெய்தார்.
அரியலூர் மாவட்டத்தில் நான்காம் கட்டமாக மாபெரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணி 300 முகாம்களில் நடைபெற்று வருகிறது.
இன்று அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஆதிச்சனூர், வெண்மான்கொண்டான், முட்டுவாஞ்சேரி மற்றும் சுத்தமல்லி ஆகிய கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும்,தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி, நாயகனைப்பிரியாள் பகுதிநேர அங்காடி, ஸ்ரீபுரந்தான், சாத்தம்பாடி ஆகிய கிராமங்களிலும் திருமானூர் ஊராட்சி ஒன்றியத்தில் தூத்தூர், குருவாடி,அழகியமனவானம், வடுகப்பாளையம், கீழகொளத்தூர் ஆகிய கிராமங்களில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளிலும் நடைபெற்று வரும் நான்காம் கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது தடுப்பூசி செலுத்த வருகை தந்த பொதுமக்களிடம் 18-வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும்,தங்கள் வீடுகளில் உள்ளவர்கள் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ளவர்களிடம் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்த வேண்டும், தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் பயன்கள் குறித்து அருகிலுள்ள பொதுமக்களுக்கும் தெரிவித்து 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டமாக அரியலூர் மாவட்டத்தை மாற்றிட அனைத்து பொதுமக்களுக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்களிடம் கலெக்டர் கேட்டுக்கொண்டார்.
மேலும், கர்ப்பிணித்தாய்மார்களுக்கென்று தனியே தடுப்பூசி முகாம் ஸ்ரீபுரந்தான் ஊராட்சியில் நடைபெறுவதை பார்வையிட்டு, தாய்மார்களுக்கு வாழ்த்துக்கூறினார்.
நடமாடும் மருத்துவக்குழுவினர் மூலமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, முகாம்களில் போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பு உள்ளதா என கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பிரபாகரன், வட்டாட்சியர்கள் ஆனந்தன் (ஜெயங்கொண்டம்), ராஜமூர்த்தி (அரியலூர்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உடன் சென்றிருந்தனர்.