காலை சிற்றுண்டி திட்டத்தில் தயாரிக்கப்பட்ட உணவினை கலெக்டர் ஆய்வு
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் சோதனை ஓட்ட முறையில் சிற்றுண்டி வழங்கும் பணியை அரியலூர் கலெக்டர் ஆய்வு செய்தார்.;
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி, மேலக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் சோதனை ஓட்ட முறையில் உணவு தயாரிக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி இன்று (08.09.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 15.09.2022 அன்று துவங்கப்படவுள்ளது. இதன் ஒரு பகுதியாக அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.
ஜெயங்கொண்டம் நகராட்சி, மேலக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் இவ்வுணவு தயாரிப்பதற்கான சமையல் கூடம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் இன்றைய தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து, மேலக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த சமையல் கூடத்தில் நாச்சியார் அம்மன் சுயஉதவிக்குழுவால் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு தயார் செய்து வழங்கும் பணியின் முன்னோட்ட நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்றைய தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மாணவர்களுக்கு தயாரிக்கப்படும் உணவின் தரம் மற்றும் சுவையினை சாப்பிட்டு, ஆய்வு செய்ததுடன், மாணவர்களுக்கு உணவு குறித்த நேரத்தில் கொண்டு செல்வதை உறுதி செய்யவும் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அரியலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட சின்னவளையம், மணக்கரை, மலங்கன் குடியிருப்பு, ஜெயங்கொண்டம் (தெற்கு), ஜெயங்கொண்டம் (வடக்கு), கீழக்குடியிருப்பு, கொம்மேடு, செங்குந்தபுரம ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் ஜெயங்கொண்டம் ஆதிதிராவிடர் நல துவக்கப் பள்ளி ஆகிய 9 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 464 மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.
மேலும், செங்குந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் சோதனை ஓட்ட முறையில் சிற்றுண்டி வழங்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்ததுடன், சிற்றுண்டிகளை மாணவர்களுக்கு சரியான நேரத்தில் வழங்கும் வகையில் காலை 8.10 மணி முதல் 8.50 மணிக்குள் சம்மந்தப்;பட்ட பள்ளிகளுக்கு வாகனம் மூலம் கொண்டு சென்று மாணவர்களுக்கு வழங்குவதை உறுதி செய்யவும், கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், வட்டாட்சியர் துரை, நகராட்சி ஆணையர் (பொ) சித்ரா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.