மணல் குவாரி திறக்க கோரி தீக்குளித்த மாட்டு வண்டி தொழிலாளி உயிரிழப்பு

அரியலூர் மாவட்டத்தில் மணல் குவாரி திறக்ககோரி தீக்குளித்த மாட்டு வண்டி தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2021-09-11 07:39 GMT

மாட்டு வண்டி தொழிலாளி பாஸ்கர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி மாற்றுத்திறனாளி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பாஸ்கர் மணல் மாட்டு வண்டி  தொழிலாளியாவார்.

இந்நிலையில் மாட்டு வண்டி மணல் குவாரிகள் மூடப்பட்டதால், தொழில் இல்லாமல் பாஸ்கர் மிகவும் வறுமையில் வாடினார்.. மேலும் அனுமதி இல்லாமல் மாட்டு வண்டியில் மணல் எடுத்து வந்ததாக கூறி, காவல்துறையினர் வண்டியை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

ஏற்கனவே சரியான வேலையில்லாமல் வருமானம் இன்றி ஏழ்மை நிலையில் இருந்த பாஸ்கர் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டியை மீட்க முடியாதது குறித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் புலம்பிக் கொண்டு, சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2ம்தேதி  பாஸ்கர் உதயநத்தம் பேருந்து நிறுத்தத்தில் திடீரென தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அருகில் இருந்த பொதுமக்கள், உடனடியாக தண்ணீரை அவர் மீது ஊற்றி தீயை அணைத்தனர்.

ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனையில், முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பாஸ்கர் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பாஸ்கர் நேற்றுஇரவு தஞ்சாவூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனையொட்டி இன்று அவரது உடல் சொந்தஊருக்கு கொண்டுவரப்பட்டு உடல்அடக்கம் நடைபெறவுள்ளது.

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டபோது பாஸ்கர், மணல் குவாரி அமைத்து அனைத்து தொழிலாளிகளும் பயன்பெற வேண்டும் என்ற கோரிக்கைக்காக தான் தீக்குளித்தாக வாக்குமூலம் அளித்திருந்தார். பாஸ்கர் உயிரிழப்பு செய்தி மாட்டு வண்டி தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News