கார், டாரஸ் லாரி மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலத்த காயம்

ரமேஷ் ஓட்டி வந்த காரும் விருத்தாசலத்தில் இருந்து காரைக்காலுக்கு சாம்பல் லோடு ஏற்றி வந்த டாரஸ் லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது.

Update: 2022-06-27 07:28 GMT

விபத்துக்குள்ளான கார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவிரிப்பூம்பட்டினம் தாலுகா கல்லுகொடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகன் ரமேஷ் வயது (37).  இவரும், இவரது மனைவி அம்சவேணி (35), குழந்தைகள் யாழினி (8), செழியன் (7) ஆகியோர் காரில் கிருஷ்ணகிரியில் இருந்து கும்பகோணம் அருகே உள்ள சூரியநாராயணன் கோயிலுக்கு சென்று  தரிசனம் செய்து விட்டு மீண்டும் கிருஷ்ணகிரிக்கு சென்றுக் கொண்டிருந்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் - விருத்தாச்சலம் ரோட்டில் கூவத்தூர் அருகே மடத்தெரு பகுதியில் சென்று கொண்டிருந்த போது ரமேஷ் ஓட்டி வந்த காரும், எதிரே விருத்தாசலத்தில் இருந்து காரைக்காலுக்கு சாம்பல் லோடு ஏற்றி வந்த டாரஸ் லாரியும் எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் கார் அப்பளம் போல் நொருங்கி உருண்டு ஓடியது. இதில் காரில் பயணம் செய்த ரமேஷ், அவரது மனைவி அம்சவேணி, மகள் யாழினி, மகன் செழியன் உள்ளிட்ட அனைவரும் பலத்த காயமடைந்து காரில் சிக்கிக் கொண்டனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அவர்கள் அனைவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கார் டிரைவர் தூங்கியதால் விபத்தா? அல்லது லாரி ஓட்டுநர் தூங்கினாரா?  விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் இது குறித்து டாரஸ் லாரியை ஓட்டி வந்த சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுக்கா பகடப்பாடி ராமர் என்பவரது மகன் கோபியை (39) போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News