அரியலூர் அருகே கதண்டு வண்டுகள் கடித்து 2 பெண்கள் உட்பட 7 பேர் காயம்
ஆண்டிமடம் அருகே கூவத்தூர் கிராமத்தில் கதண்டு கடித்து 2 பெண்கள் உட்பட 7 பேர் காயம் அடைந்தனர்.;
கதண்டு வண்டு கடித்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கூவத்தூர் வடக்குத் தெருவில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் கருவேல மரத்தை அப்புறப்படுத்திய போது அதிலிருந்த கதண்டு கூடுகள் கலைந்து அங்கு மரம் வெட்டிக் கொண்டிருந்த அதே தெருவைச் சார்ந்த பாலு ராஜேந்திரன் கார்த்திகேயன் முருகேசன் ரவிச்சந்திரன் மற்றும் அங்கு நூறு நாள் வேலையில் ஈடுபட்டிருந்த அமலோற்பவ மேரி மற்றும் அவரது மகள் அடைக்கல மேரி ஆகிய ஏழு பேரையும் கதண்டுகள் துரத்தி துரத்தி கடித்தன. இதில் காயமடைந்த இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அமலோற்பவ மேரி மற்றும் அவரது மகள் அடைக்கல மேரி ஆகிய இருவரும் உள்நோயாளியாக இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற 5 பேரும் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். கூவத்தூர் பகுதியில் கதண்டுகள் துரத்தி கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.