நிலத்தை அரசுகையகப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு : 5 பெண்கள் தீக்குளிக்கமுயற்சி
தற்போது அந்த இடத்தை 74 மனைகளாக பிரித்து அதில் 66 மனைகள் அப்பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
ஜெயங்கொண்டம் அருகே தாழ்த்தப்பட்ட பொதுமக்களுக்கு வழங்க இடத்தை அரசு கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, 5 பெண்கள் திடீரென தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஆதிச்சனூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலத்தை ஆதிதிராவிடர்களுக்கு வழங்குவதற்காக தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தின் மூலம் பணம் செலுத்தி நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதனை அடுத்து நிலத்தின் உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கானது 2014 -ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதில் தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பானது.
இதனை தொடர்ந்து நிலத்தின் உரிமையாளர்கள் மாவட்ட நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கானது 2018 -ஆம் ஆண்டு அரசுக்கு மீண்டும் சாதகமான தீர்ப்பு வழங்கியது. இதனை தொடர்ந்து, தற்போது அந்த இடத்தை 74 மனைகளாக பிரித்து அதில் 66 மனைகள் அப்பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த இடத்தினை தேர்வு செய்து மனைகள் அளவீடு செய்ய சென்ற அதிகாரிகளை பொதுமக்கள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் இடத்தினை அளவீடு செய்து கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த நிலத்தின் உரிமையாளர்கள் வீட்டில் இருந்த ஐந்து பெண்கள், அளவீடு செய்யும் இடத்திற்கு வந்து, உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். சம்பவத்தை அறிந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த. போலீசார், தீக்குளிக்க முயற்சி செய்த பெண்களை தடுத்து நிறுத்தி, அவர்களை போலீஸ் வேனில் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அரசு அளவீடு செய்யும் பணி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியதும் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் அளவீடு செய்து முடித்தனர் . இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.