ஜெயங்கொண்டம் நகராட்சியில் ட்ரோன்" மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி

ஜெயங்கொண்டம் நகராட்சியில் ட்ரோன்" மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி துவங்கியது.

Update: 2021-05-23 07:21 GMT

அரியலூர் மாவட்டம்  ஜெயங்கொண்டம் நகராட்சியில் கொரோனா வைரசை, கட்டுப்படுத்த ட்ரோன் கருவி மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை தீவிரமாக வீசி வருகிறது. இதையடுத்து தமிழக அரசின் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் அடங்கிய முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் த.ரத்னா உத்தரவின் பேரில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மாவட்டம் முழுவதும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் கொரோனா தொற்று அதிகரிப்பதை தொடர்ந்து தொற்றுநோய் மேலும் காற்றில் பரவாமல் இருப்பதற்காக வேண்டி நகராட்சி சார்பில் "ட்ரோன்" மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி இன்று ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் உடையார்பாளையம் ஆர்டிஓ அமர்நாத் மேற்பார்வையில் தொடங்கியது.

ட்ரோன் கருவியானது 12 கிலோ எடை கொண்டு, 12 லிட்டர் கிருமி நாசினியை வான்வழி மூலம் தெளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஜெயங்கொண்டம் நகராட்சியில் தொற்று அதிகம் பாதித்த இடங்களில் கிருமிநாசினி அடிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வில் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷினி, ஜெயங்கொண்டம் டிஎஸ்பி தேவராஜ், ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் மூலம் ட்ரோன் குழுவினர் வரவழைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News