ஜெயங்கொண்டம் - அரசு பேருந்தில் முதியவர் உயிரிழப்பு
தஞ்சாவூர் மாவட்டம் கீழராஜவீதியை சேர்ந்த ரகுராம் சர்மா, ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் உயிரிழப்பு.;
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி செல்லக்கூடிய அரசு பேருந்தில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க முதியவர் பயணம் செய்வதற்காக பேருந்தில் அமர்ந்துள்ளார். அப்போது முதியவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டடுள்ளது. முதியவர் பேருந்தில் இருக்கையிலேயே சாய்ந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் உதவியாளர்கள், முதியவரை பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து, பேருந்து நடத்துனர் இளையராஜா ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவர் யார் என்பது குறித்து விசாரணை செய்த போது, அவர் வைத்திருந்த செல்போன் தொடர்பு கொண்டு போலீசார் விசாரித்ததில், அவர் தஞ்சாவூர் மாவட்டம் கீழராஜவீதியை சேர்ந்த ரகுராம் சர்மா என்பதும் ஜோதிடத் தொழிலை செய்து வருவதும் தெரியவந்தது.
மேலும் அவரது கைப்பையில் பட்டுநூல், தராசு உள்ளிட்ட பொருட்களும் 50000 ரொக்கமும் இருந்ததை போலீசார் கைப்பற்றி உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். முதியவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பேருந்து நிலையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.