சாலையின் குறுக்கே போடப்பட்ட கட்டையில் இருசக்கர வாகனம் மோதி ஒருவர் பலி
அரியலூர் அருகே சாலையின் குறுக்கே போடப்பட்டிருந்த மரக்கட்டையில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.;
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி (34). இவருக்கு கெளரி என்ற மனைவி சிவா (3) ஒன்றரை வயது கௌதம் ஆகிய மகன்கள் உள்ளனர். மணி ஆசாரி வேலை பார்த்து வருகிறார். தற்போது கடிச்சம்பாடியில் கிராமத்தில் ஆசாரி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கோடங்குடி கிராமத்தில் கடந்த 10 நாட்களாக மனைவி மகன்களுடன் மாமியார் வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதற்காக கும்பகோணம் நோக்கி இரண்டு சக்கர வாகனத்தில் சென்றபோது கோடங்குடி- சிந்தாமணி இடைப்பட்ட பகுதியில் சாலையோரம் கடலையின் பாதுகாப்பிற்கு மரக்கட்டைகளை போட்டிருந்ததால் மரக்கட்டையில் மோதி எதிர்பாராதவிதமாக தூக்கி எறியப்பட்டவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த தா.பழூர் காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.