அரியலூர் மாவட்டத்தில் மழைநீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்
அரியலூர் மாவட்டம் கோடாலிகருப்பூர் கிராமத்தில் 500ஏக்கர் நிலத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர் மழைநீரில் மூழ்கியது.;
அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை வேளையில் அவ்வப்போது மழை கொட்டித் தீர்த்தது. இதனால் விவசாய நிலங்களில் தண்ணீர் அதிகப்படியாக தேங்கியது பல்வேறு இடங்களில் தண்ணீர் வடிய வடிகால் வசதி இல்லாமல் தேங்கிக் கிடந்தது.
கோடாலிகருப்பூர் மற்றும் அகரபெட்டை கிராமத்திற்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள சுமார் 500 ஏக்கர் நெல் நடவு விவசாய நிலங்களில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் நடவு செய்யப்பட்ட நான்கு நாட்களே ஆன நெல் வயல்களில் தண்ணீர் தேங்கியதால் நெல் நடவு நாற்றுகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. வடிகால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் தண்ணீர் வெளியேற வழி இல்லாமல் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகையால் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வடிகால் வாய்க்கால் அமைத்து, வரும் மழைக்காலங்களிலும், வரும் ஆண்டுகளிலும் மழையில் சிக்கி பயிர்கள் வீணாக வண்ணம் பாதுகாக்க வேண்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.