5 முனைப்போட்டியில் ஜெயங்கொண்டம் கைப்பற்றுவது யார், நேரடி கள ஆய்வு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. தேர்தலில் வெற்றிப்பெற்று தொகுதியை கைப்பற்றுவது யார் என்று இன்ஸ்டாநியூஸ்சிட்டி.காம் ஒரு நேரடி கள ஆய்வு மேற்கொண்டது. இதோ அதன் விவரம்;

Update: 2021-03-16 09:19 GMT

கங்கைவரை படையெடுத்து வெற்றி பெற்றதன் நினைவுச்சின்னமாக சோழ மன்னன் இராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம், 250ஆண்டுகள் சோழர்களின் தலைநகரமாக இருந்து இந்தியாவையும், ஆசிய கண்டத்தின் சில பகுதிகளையும் ஆட்சிபுரிந்த பகுதி. யுனெஸ்கோவின் உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, கட்டிடக்கலையின் பெருமையாக விளங்கும் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள ஸ்ரீ பிரகதீஸ்வரர் ஆலயம். ஆண்டு தோறும் உலக சுற்றுலாப் பயணிகளின் வருகையும், ஐப்பசிபொளர்ணமி அன்று நடைபெறும் அன்னாபிஷேகமும், ஒரே கல்லால்ஆன சூரியபகவான் ரதத்தில் வர அதனைச்சுற்றி, நவகிரகங்களும் அமைந்த நவகிரக சன்னதியும் இவ்வாலய சிறப்பு. மேலும் இத்தொகுதிக்கு மற்றொரு சிறப்பு கருப்பு தங்கம் என்றழைக்கப்படும் நிலக்கரி. பல ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்த பகுதி. கடல் உள்வாங்கியதால் படிமங்களில் ஏற்பட்ட வேதிவினைகளால் நிலக்கரி படிமம் நிறைந்த பூமி.

இத்தொகுதியின் தெற்கு பகுதியான தா.பழுர் ஒன்றியம் கொள்ளிடக்கரையோரம் அமைந்துள்ளதால் வளமான டெல்டா பாசனப்பகுதியாகும். ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஒன்றியங்களில் முந்திரி பயிர் பிரதான விவசாய உற்பத்தி பயிராகும்.

1991ம்ஆண்டு இத்தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ சின்னப்பன், அப்போது ஜெயாகாங்கிரஸ் என்றழைக்கப்பட்ட குழுவில் ஜெயலலிதாவை ஆதரித்ததும், 2006 தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக எம்எல்ஏ ராஜேந்திரன் பின்னர் திமுகவில் இனைந்ததும் கட்சிகளில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்கள்.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் ஜெயங்கொண்டம், தா.பழுர் என இரண்டு ஊராட்சி ஒன்றியங்களின் பகுதிகளும், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தின் முழுப்பகுதியும் உள்ளன. இத்தேர்தலில் 1,31,663 ஆண் வாக்காளர்களும், 1,34,347 பெண் வாக்களார்களும் இதர வாக்காளர்கள் 3பேரும் சேர்த்து மொத்தம் 2,66,013 வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

1952ல் இருந்து 2016ம் வருடம்வரை நடைபெற்ற 15 சட்டமன்ற தேர்தல்களில் இதுவரை தி.மு.க. 5 முறையும், காங்கிரஸ் 4 முறையும், அ.தி.மு.க 4 முறையும், பாமக1 முறையும், சுயேட்சை 1 முறையும் வெற்றிபெற்றுள்ளது. இத்தொகுதியில் வன்னியர் 38சதவீதமும், தாழ்த்தப்பட்டோர்25 சதவீதமும், முதலியார்17 சதவீதமும், இதர வகுப்பினர் 20 சதவீதமும் உள்ளனர்.

கடந்த 2016 - ஆம் வருட சட்டமன்ற தேர்தல் - அதிமுக வெற்றி

பெயர்                                                        கட்சி                 வாக்குகள்       வித்தியாசம்


1.ஜே.கே.என்.ராமஜெயலிங்கம்         : அதிமுக           : 75,431            23,051

2.ஜெ.குரு                                                  : பாமக                : 52,380

3. ஜி.ராஜேந்திரன்                                    : காங்கிரஸ்       : 46,464

4. என்.எஸ்.கந்தசாமி                             : மதிமுக            : 21,312

5. ஆர்.கிருஷ்ணமூர்த்தி                        : நாம்தமிழர்      : 1,322

6. எஸ்.கிருஷ்ணமூர்த்தி                        : பாஜக              : 1,090

6. நோட்டா                                                                             : 1,943

தற்போது நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் ஐந்துமுனைப்போட்டி நிலவுகிறது. அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளராக வழக்கறிஞர் பாலு களம் இறங்கியுள்ளார். திமுக கூட்டணியில் திமுகவை சேர்ந்த கண்ணன் வேட்பாளராக உள்ளார். இந்திய ஜனநாயகட்சியின் வேட்பாளராக வன்னியர் சங்கத்தலைவர் காடுவெட்டி குருவின் மனைவை சொர்னலதா போட்டியிடுகின்றார். நாம் தமிழர் கட்சி சார்பில் நீல.மகாலிங்கமும், அமமுக கட்சியின் சார்பில் சிவாவும் தேர்தல் களத்தில் உள்ளனர்.

பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு

அதிமுக கூட்டணியின் வேட்பாளராக களம் இறங்கியுள்ள பாமக வேட்பாளர் பாலுவின் சொந்தஊர் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள வாழகுட்டை கிராமம். இவர் கடந்த 20 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வருகின்றார். இவர் சமூக நீதிப் பேரவை என்ற அமைப்பின் தலைவராகவும் உள்ளார்.

தேசிய நெடுஞ்சாலைகளில் அரசு மதுபான கடை அமைக்க தடை விதிக்க வேண்டும். விவசாயிகள் மட்டும் விவசாயத்தை பாதிக்கும் வகையில் அமைக்கப்பட உள்ள எட்டு வழி சாலை திட்டத்தை திரும்ப பெற வேண்டும். இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு பொதுநல வழக்குகளை உயர் நீதிமன்றத்தில் தொடுத்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார். குறிப்பாக வரும் காலங்களில் உயிரிழக்கும் எந்த ஒரு அரசியல் கட்சி தலைவர்களின் உடல்களையும் மெரினாவில் அடக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது திமுக தலைவர் கருணாநிதி உயிரிழந்ததையடுத்து மெரினாவில் அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில் நீதிமன்றத்தை திமுகவினர் நாடி உள்ளனர். அப்போது வக்கீல் பாலு தொடர்ந்துள்ள வழக்கை அவர் வாபஸ் பெற்றால் மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய உத்தரவிடப்படும் என நீதிமன்றம் கூறியதையடுத்து வக்கீல் பாலு தான் தொடுத்த வழக்கை திரும்ப பெற்றுக்கொண்டார். இதனையடுத்தே திமுக தலைவர் கருணாநிதியின் உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இவர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் சமூகநீதி உள்ளிட்டவற்றை பாதுகாக்கும் வகையில் பல்வேறு வழக்குகளை நீதிமன்றத்தில் தொடுத்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை பலமாகவும், இத்தொகுதியில் உள்ள வன்னியர் சமூதாய வாங்குவங்கி மற்றும் அதிமுகவின் வாக்குவங்கி ஆகியவை தனக்கு மிகவும் கைக்கொடுக்கும் என்ற பலத்துடன் களத்தில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

திமுக வேட்பாளர் க.கண்ணன்

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக க.சொ.க.கண்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அரியலூர் மாவட்டம் கண்டியன்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை க.சொ.கணேசன் ஜெயங்கொண்டம் தொகுதியில் 1989,-1991,1996,-2001 ஆகிய 4 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். மேலும் 1986-,1991,1996-,2001 ஆகிய 4 முறை தா.பழூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக பணியாற்றியுள்ளார்.

திமுக வேட்பாளராக போட்டியிடும் கண்ணன், எம்.காம் படித்துள்ளார். 18ஆண்டுகள் ஒருங்கினைந்த தா.பழூர் ஒன்றிய தி.மு.க ஒன்றிய செயலாளராகவும், 2018ல் இருந்து தா.பழூர் கிழக்கு ஒன்றிய செயலாளராகவும் கட்சி பொறுப்பில் உள்ளார். மேலும் -2006, 2001ம் ஆண்டுகளில் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக பணியாற்றியுள்ளார். ஜெயங்கொண்டம் க.சொ.க பாலிடெக்னிக் கல்லூரி தாளாளராகவும், தனது தந்தை க.சொ.கணேசன் நினைவு அறக்கட்டளை சார்பில் ஆண்டுகள் தோரும் உடல் நலிவுற்றவர்கள் மற்றும் கல்வி பயில ஏழை மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார். விவசாயிகளுக்கு ஆதரவாகவும்,பொன்னாறு வாய்க்கால் தூர்வாரவேண்டியும் கட்சி அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்று சிறை சென்றுள்ளார். தனது தந்தை இப்பகுதியில் ஆற்றியுள்ள பணிகள் மற்றும் தான் தா.பழுர் ஒன்றியக்குழுத்தலைவராக பணியாற்றியபோது செய்த நலத்திட்டங்கள் ஆகியவற்றையும், தான் சார்ந்துள்ள திமுக கட்சியின் வாக்குவங்கி, கூட்டணி கட்சிகளின் செல்வாக்கு, சிறுபான்மையினரின் ஆதரவு ஆகியவை தனக்கு தோள் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தொகுதியை வலம் வருகிறார் கண்ணன்.

ஐஜேகே வேட்பாளர் சொர்ணலாதா

இந்தியஜனநாயக கட்சி மக்கள்நீதிமையம், சரத்குமார் ஆகியவர்களுடன் உடன்பாடு வைத்த பெற்ற 40தொகுதிகளில் வன்னியர் சங்கத்தலைவர் காடுவெட்டி குருவின் மகன் தோற்றுவித்துள்ள மாவீரன் மஞ்சள்படை கட்சி இந்திய ஜனநாயக கட்சியுடன் தொகுதி உடன்பாடுவைத்துக்கொண்டு தற்போது இத்தொகுதியில் போட்டியிடுகிறது. இத்தொகுதியின் வேட்பாளராக காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலாதா போட்டியிடுகிறார்.

பாமகவுடன் ஏற்பட்ட கருத்துமோதலால் குருவின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை பாமக நிறுவனத்தலைவர் ராமதாஸ் செய்யவில்லை என்ற அடிப்படையில் குருவின் மகன் கணலரசன் தனியாக மாவீரன் மஞ்சள்படை என்ற கட்சியை தொடங்கி நடத்திவருகிறார். இவருக்கும் பாமவிற்கும் இத்தொகுதியில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் பாமகவை எதிர்த்து களம் இறங்கியுள்ளார்கள். காடுவெட்டி குருவின் உண்மையான தொண்டர்கள் தம்பக்கம் உள்ளார்கள் என்ற அடிப்படையில் போட்டியில் ஈடுபட்டுள்ளார்கள். இத்தொகுதியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சியின் பலம் மற்றும் மக்கள்நீதிமையம் மற்றும் சரத்குமாரின் ஆதரவு ஆகியவை தங்களுக்கு பலம்அளிக்கும் என்ற நம்பிக்கையுடன் தேர்தல் எதிர்கொள்கிறார் காடுவெட்டியின் மனைவி சொர்ணலதா. வன்னியர் சங்கத்தலைவராக குரு ஜெயங்கொண்டம் நிலக்கரி அனல்மின் திட்டத்தை எதிர்த்து விவசாயிகளுக்காக நடத்திய போராட்டங்களை தான் தொடருவேன் என்ற இவரது வாக்குறுதிக்கு பொதுமக்கள் அளிக்கும் பதிலை தேர்தல் முடிவுகள்தான் தெரிவிக்கும்.

நாம்தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் நில. மகாலிங்கம் மற்றும் அமமுக தினகரன் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிவா ஆகிய இருவரும் இப்பகுதியில் அதிகம் செல்வாக்கு பெற்றவராக இல்லாவிட்டாலும், இவர்களின் தலைவர்களான சீமான், மற்றும் தினகரன் ஆகிய இருபெரும் தலைவர்களுக்கு கிடைக்கும் வாக்குகளே இவர்களின் வாக்குகளாக கருதப்படுகிறது.

ஜெயங்கொண்டம் தொகுதியில் 5முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் குறிப்பாக பாமக, திமுக, ஐஜேகே கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்படும் சூழ்நிலையில் ஒருவிரல் புரட்சியாளர்களாகிய பொதுஜனம் வருகின்ற ஏப்ரல் ஆறாம்தேதி வழங்கும் முடிவு மேமாதம் 2ம்தேதி அன்று வெளிப்படும்போது தொகுதியில் போட்டியிடுபவர்களில் அதிகவாக்குகள் பெற்று முதலிடத்தை பிடித்து முதன்முதலாக சட்டமன்றத்திற்கு சென்று அரியாசனத்தில் அமரப்போவது யார் என்பது தெரியவரும்.




Tags:    

Similar News