முயல் வேட்டையில் நடந்த குளறுபடியால் அரியலூர் அருகே 2 பெண்கள் கொலை
அரியலூர் அருகே முயல் வேட்டையில் நடந்த குளறுபடியால் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.;
கொலை செய்யப்பட்ட இரண்டு பெண்கள் மற்றும் கைது செய்யப்பட்ட பால்ராஜ்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மேலத்தெரு தண்டபாணி என்பவருடைய மனைவி கண்ணகி (50). இவரும் தெற்கு தெருவை சேர்ந்த கலைமணி மனைவி மலர்விழி (29) ஆகிய இருவரும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தைலமரக்காட்டில் தற்போது பெய்துள்ள மழையினால், காட்டில் முளைத்த காளான்களை பறிக்க சென்றுள்ளனர்.
சைக்கிளில் சென்ற இருவரும் ஓரிடத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு பின்னர் நடந்து தைலமரக்காட்டில் ஆட்கள் இல்லாத இடத்தில் காளான்களை பறிக்கச் சென்றுள்ளனர் .
காளான் பறிக்கச் சென்ற இருவரையும் வெகுநேரம் ஆகியும் காணவில்லை என்பதால், அவர்களது குடும்பத்தினர் தேடியுள்ளனர். அப்போது பெரியபாளையத்தில் இருந்து கழுவந்தோண்டி செல்லும் சாலையில் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே இருவரும் சென்றுள்ளது தெரியவந்தது. சைக்கிள் கிடந்த இடத்திலிருந்து நடைபாதை வழியாக உள்ளே சென்று பார்த்த போது இருவரும் அறிவாளால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இறந்து கிடந்துள்ளனர்.
உறவினர்கள் உடனடியாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை செய்தனர்.
சம்பவ இடத்திற்கு மோப்பநாய் டிப்சி மற்றும் தடய அறிவியல் துறையினர் வருகை தந்து தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் டிப்சி கழுவந்தோண்டி கிராமத்திற்கு சென்று நின்றுவிட்டது. இதனையடுத்து இறந்து கிடந்த இருவரின் உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இறந்து கிடந்தவர்களின் கழுத்தில் அணிந்திருந்த நகைகளுக்காக நடைபெற்றதா, அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஒரே இடத்தில் இரண்டு பெண்களின் படுகொலை நடைபெற்ற சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் உடற்கூறு ஆய்வு நடத்திய மருத்துவர்கள் கண்ணகியின் தொடை பகுதியில் சுளுக்கியால் குத்திய காயம் உள்ளதாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட போலீசார் தனிப்படைகள் அமைத்து கொலையாளியை பிடிக்க தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த மோப்பநாய் டிப்சி கொலை நடந்த இடத்தில் இருந்து கழுவந்தோண்டி கிராமத்திற்கு சென்றதையடுத்து அங்கு வேட்டைக்கு செல்பவர்கள் குறித்து போலீசார் விசாரனை நடத்தினர். அப்போது மோப்பநாய் டிப்சி நின்ற இடத்திற்கு அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் பால்ராஜ் என்பவர் வேட்டைக்கு செல்வார் என்றும், கொலைநடத்த இடத்திற்கு அருகில் பால்ராஜ்க்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளதும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அருகில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் மூலம் போலீசார் பால்ராஜின் நடமாடத்தை தேடியபோது தனது இரு சக்கர வாகனத்தில் த.பழூர் பகுதிக்கு பால்ராஜ் தப்பி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் செல்போன் டவர் மூலம் பால்ராஜை சுற்றிவளைத்து பிடித்தனர்.
பால்ராஜிடம் நடத்திய விசாரணையில், கொலை நடந்த பகுதியில் அவரின் நிலம் உள்ளதால் அப்பகுதியில் வழக்கம்போல அன்றும் வேட்டைக்கு சென்று உள்ளார்.
அப்போது அந்த பகுதியில் ஆணாச்செடி புதருக்குள் முயல் இருப்பது போன்ற அசைவு இருந்தது. இதனைக் கண்ட பால்ராஜ் புதருக்குள் முயல் இருப்பதாக நினைத்து தான் கையில் வைத்து இருந்த சுளுக்கியை எறிந்து உள்ளார்.
அப்போது அங்கே காளான் பிடுங்கி கொண்டு இருந்த கண்ணகி காலில் சுளுக்கி குத்தியதால் அவர் வலிதாங்க முடியாமல்அலறியுள்ளார். இதனைக் கண்ட பால்ராஜ் அதிர்ச்சி அடைந்து முயல் என்று குத்திவிட்டதாக கூறி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கண்ணகி தனது செல்போன் மூலம் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க முயற்சி செய்து உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பால்ராஜ் தான் வைத்து இருந்த கத்தியால் கண்ணகியை சரமாரியாக குத்தியதோடு கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்று உள்ளார்.
இந்த நிலையில் அருகே காளான் பிடுங்கி கொண்டு இருந்த மலர்விழி, கண்ணகியின் அலறல் சத்தம் கேட்டு அங்கே ஓடி வந்து உள்ளார். மலர்விழியையும் தலையில் கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு அவர் அணிந்து இருந்த 6 1/2 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து கொண்டு பால்ராஜ் அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து ஜெயங்கொண்டம் போலீசார் பால்ராஜை கைது செய்து அவரது வீட்டில் இருந்த மலர்விழியின் தாலிச்சங்கிலியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது வீட்டில் இருந்து கொலைக்கு பயன்படுத்திய சுளுக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர்களின் பெரியவளையம் கிராமமும் கொலையாளியின் கழுவந்தோண்டி கிராமமும் அருகருகே உள்ளது. பெரியவளையம் கிராமத்தை சேர்ந்த இறந்தவர்களின் உறவினர்கள் கழுவந்தோண்டி கிராமத்திற்கு சென்று பால்ராஜின் வீட்டை தாக்ககூடும் என்ற தகவல் கிடைத்ததன்பேரில் இரு கிராமங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.