ஜெயங்கொண்டம் பகுதியில் கடன் தொல்லையால் 10 நாட்களுக்கு முன்பு காணாமல் போன லாரி டிரைவர் சடலமாக மீட்கப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள புதுக்குடி பெரியபாலம் அருகே துர்நாற்றம் வீசியதை அடுத்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் வந்து பார்த்ததில் ஒரு ஆண் சடலம் நிறம் மாறி அழுகிய நிலையில் கிடந்தது. அவரது உடலில் சோதனை செய்து பார்த்ததில் ஓட்டுநர் உரிமம் கண்டெடுக்கப்பட்டு பார்த்ததில் அவர் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஆமணக்கந்தோண்டி கிராமத்தை சேர்ந்த கார்மேகம், லாரி டிரைவர் என்பதும் தெரியவந்தது.
இதை அடுத்து அவரது வீட்டிற்கு சென்று விசாரித்ததில் கார்மேகத்திற்கு திருமணமாகி கௌசல்யா என்ற மனைவியும், அகரன், ஹாசினி என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் லாரி ஓட்டும் வேலைக்கு சென்றால் 10 அல்லது 15 நாட்கள் கழித்துதான் வீட்டிற்கு வருவது வழக்கம். அதேபோன்று கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்றவர் 4 நாட்களுக்கு முன்பு தனது மனைவி கௌசல்யாவிற்கு வீடியோ கால் மூலம் பேசியுள்ளார். அப்பொழுது தனக்கு கடன் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், தான் புதுக்குடி பெரியபாலம் அருகே இருப்பதாகவும் விஷமருந்தி தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் பேசியுள்ளார்.
இதில் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி தனது உறவினர்களிடம் கூறி அப்பகுதியில் தேடிவந்தனர். அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது போன் சுவிட்ச் ஆப் செய்துள்ளதால் மேலும் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை கார்மேகத்தின் உடல் கண்டெடுக்கப்பட்டு போலீசார் விசாரணைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.