காடுவெட்டி குருவின் மனைவி வேட்பு மனு தாக்கல்
ஜெயங்கொண்டம் தொகுதியில் மறைந்த காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா வேட்பு மனு தாக்கல் செய்தார்;
நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி, மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி ஆகியவை இணைந்து தேர்தலை எதிர்கொள்கிறது.
இதில் இந்திய ஜனநாயக கட்சி 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் குறிப்பாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில், மாவீரன் மஞ்சள் படையுடன் தொகுதி உடன்பாடு கொண்டுள்ளது. இதில் முன்னாள் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்துவிற்கு ஜெயங்கொண்டம் அருகில் உள்ள மகிமைபுரம் கிராமத்தில், வெடி வெடித்து கோஷமிட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மகிமைபுரம் கிராமத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் வரை இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்று ஜெயங்கொண்டம் வட்டாட்சியரும் உதவி தேர்தல் அலுவலருமான கலைவாணனிடம் வேட்பாளர் மறைந்த காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, மாவீரன் மஞ்சள் படை தலைவர் கனலரசன் உடன் இருந்தனர்.
இதில் கலந்து கொண்ட இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், இந்திய ஜனநாயக் கட்சி நல்லவரால் தோற்றுவிக்கப்பட்டது. அதனால் இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த கட்சியில் சேர்ந்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் இந்திய ஜனநாயக கட்சி 40 இடங்களில் போட்டியிடுகிறது. நல்ல வெற்றி வாய்ப்பு எங்களுக்கு உள்ளது. கமல் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட கூட்டணியில் உள்ள நாங்கள் மூவரும் கிளீன் ஹேண்ட் எனப்படும் கறைபடாத கரங்களாக அரசியலில் திகழ்ந்து வருகிறோம்.
எனவே இது இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று நல்ல கட்சியாக பார்க்கப்படுகிறது. எங்களை பொருத்தவரை நாங்கள் மூன்றாவது அணி அல்ல, முதலாவது அணி. மேலும் தமிழகத்தில் வரக்கூடிய நிதி ஆதாரங்களை வைத்து நல்ல திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்களது நோக்கம். இளைஞர்கள் தேர்தலில் பங்கேற்று எங்களுக்கு நல்ல ஆதரவை வழங்கி வருகின்றனர். மாவீரன் மஞ்சள் படையும் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பை வழங்கி வருகிறது என்று கூறினார்.