அரியலூர் மாவட்டம் பிள்ளையார்பாளையம் கிராமத்தில் மழையில் மூழ்கிய 4ஆயிரம் ஏக்கர் நெல்பயிருக்கு இழப்பீடு கேட்டு வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டான் அருகே பிள்ளையார்பாளையம் கிராமத்தில் சமீபத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது. அறுவடைக்கு தயாரான நெல்மணிகளும் வயல்களில் சாய்ந்து பயிர்கள் முளைத்து வீணாகி விட்டது. எனவே பாதிக்கப்பட்ட வயல்களை வேளாண்மைத்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க கோரி நெல்வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடுபட்டு வெள்ளாமை செய்த தானியங்கள் கண்எதிரே அழிந்து போவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். கொரோனா காலத்தில் கையில் இருந்த காசை செலவழித்து பயிர் சாகுபடி செய்துள்ள நிலையில் அரசு மனது வைத்து இழப்பீடு வழங்கினால் மட்டுமே தங்களது வாழ்வாதாரம் காப்பாற்றப்படும் என்றும் மேலும் எதிர்காலத்தில் பயிர் சாகுபடி செய்ய முடியும் என்று கூறும் விவசாயிகள் தமிழக அரசு காலம் தாமதிக்காமல் இழப்பீட்டை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.