அரியலூர் மாவட்ட நகராட்சி தேர்தலில் டெபாசிட் இழந்த அரசியல் கட்சியினர்
அரியலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சியினர் பலர் டெபாசிட் இழந்துள்ளனர்.;
அரியலூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட்ட அரசியல் கட்சியினர் பலர் டெபாசிட் இழந்துள்ளனர்.
அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளுக்கு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க, பா.ம.க,அ.ம.மு.க, பா.ஜ.க, தே.மு.தி.க. மற்றும் சுயேச்சைகள் என 89 பேர் போட்டியிட்டனர். அதில், தி.மு.க மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த தலா 7 பேரும், சுயேச்சை வேட்பாளர்கள் 4 பேரும் வெற்றி பெற்றநிலையில், பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட 8 பேரும், தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட 3 பேரும், பா.ம.க. சார்பில் போட்டியிட்ட 11 பேரும், நாம்தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட 2 பேரும், மக்கள் நீதி கட்சி சார்பில் போட்டியிட்ட 1 நபரும், தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் போட்டியிட்ட 1 நபரும்,அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஒருவரும் டெபாசிட் இழந்தனர். அதேபோல், அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்ட 8 பேரில் 7 பேர் டெபாசிட் இழந்தனர்.
அதேபோல், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளுக்கு 108 பேர் போட்டியிட்ட நிலையில், அ.தி.மு.க.வை சேர்ந்த 12 பேரும், தி.மு.க.வை சேர்ந்த 2 பேரும் டெபாசிட் இழந்தனர். பா.ம.க. சார்பில் போட்டியிட்ட 21 பேரில் 4 பேர் வெற்றி பெற்றனர். ஒருவர் தோராயமான வாக்குகளை பெற்று தோல்வியுற்றார். 16 பேர் டெபாசிட் இழந்தனர். பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட 8 பேரும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட 2 பேரும் டெபாசிட் இழந்தனர். அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்ட 17 பேரில் ஒருவர் தோராயமான வாக்குகள் பெற்ற நிலையில், 16 பேர் டெபாசிட் இழந்தனர். தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட 2 பேர், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஒருவர் தோராயமான வாக்குகளை பெற்று தோல்வியை சந்தித்தனர். அதேபோல் சுயேச்சை வேட்பாளர்கள் 9 பேர் டெபாசிட் இழந்தனர்.