மேகமலை அடிவாரத்தில்அரிசிக்கொம்பன்: நிருபர்களுக்கு தடை
மேகமலை வனப்பகுதியின் அடிவாரத்தில் அரிசிக்கொம்பன் சுற்றி வருகிறது. நிருபர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.;
கடந்த நான்கு நாட்களாக தேனி மாவட்டத்தை கலங்கடித்து வரும் அரிசிக்கொம்பன் யானை இன்று சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கூத்தனாட்சி ஆற்றுப்படுகை, பச்சைக்கூமாச்சி மலைப்பகுதி வழியாக மேகமலைக்கு சென்றது. அதிகாரிகள் நிம்மதியடைந்த நிலையில், மீண்டும் அடிவாரத்திற்கு திரும்பி விட்டது. இரவு 9.30 மணிக்கு கடைசியாக கிடைத்த தகவல்களின் படி சண்முகாநதி அணைப்பகுதியில் அரிசிக்கொம்பன் முகாமிட்டிருப்பதாக தெரிகிறது.
இதற்கிடையில் அரிசிக்கொம்பன் யானை நடமாட்டம் குறித்து செய்தி சேகரிக்க வந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் பல நூரைத் தாண்டும். தமிழக, கேரள நிருபர்கள் அந்த அளவு குவிந்துள்ளனர். சிலர் நிருபர் போர்வையில் வேடிக்கை பார்க்க வந்து விட்டனர். யானையை சமாளிப்பதை விட நிருபர்களை சமாளிப்பது மாவட்ட நிர்வாகத்திற்கு பெரும் சுமையானதால் அரிக்கொம்பன் யானை பற்றி செய்தி சேகரிக்க நிருபர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
எந்த ஒரு செய்தியானாலும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக பத்திரிக்கை செய்திக்குறிப்பும், படங்களும், வீடியோக்களும் வழங்கும். நீங்கள் யானையை தொடர வேண்டாம். மீறி தொடர்ந்தால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். கைது செய்யவும் தயங்கமாட்டோம் என மாவட்ட நிர்வாகமும், போலீஸ் நிர்வாகமும் தெளிவாக கூறி விட்டனர்.
அதேசமயம் யானை நடமாட்டம் குறித்து பொய்தகவல்களை பரப்பினாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகமும், போலீஸ் நிர்வாகமும் அறிவித்துள்ளது. காரணம் கம்பத்தில் யூ டியூபர் ஒருவர் அனுப்பிய டிரோன் கேமராவால் தான் அரிசிக்கொம்பன் மிரண்டது. அதுவரை சாதுவாக இருந்த அரிசிக்கொம்பனை பிடிக்கும் முயற்சியில் அதனாலேயே பின்னடைவு ஏற்பட்டது என வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பகிரங்கமாக பிரஸ்மீட்டில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், யானையை வனத்திற்குள் பாதுகாப்பாக அனுப்பி வைப்பதற்கு முன் உரிமை தரப்படும். யானை ஊருக்குள் புகுந்து சிக்கல் ஏற்படுத்தினால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கால்நடை டாக்டர்கள் ஐந்து பேர், யானை கண்காணிப்பாளர்கள், வனத்துறையினர், போலீஸ்துறையினர், கும்கி யானைகள் தயாராக உள்ளனர். யானை பிடிபட்ட பின்னரே அதனை எங்கு விடுவது என முடிவு எடுக்கப்படும். தற்போதைய நிலையில் யானையை பாதுகாப்பதற்கும், மக்களை பாதுகாப்பதற்கும் மட்டும் முன் உரிமை வழங்கப்படுகிறது என்றார்.