வந்தால் வா... வராட்டி போ... அடித்து ஆடும் பாஜக
அமித் ஷாவின் "வேலூர் பிரகடனம்' மிக அழுத்தமாக சொல்வது ஒன்று தான், அது பாஜக தலைமையில் தான் கூட்டணி.
அதிமுக பின்னால் பாஜக செல்லாது என்பது அவர்கள் அழுத்தி சொன்ன ஒன்று. அமித் ஷா அதிமுக பிரபலங்களை தவிர்ப்பதும் , தமிழன் பிரதமராவான் என சீறுவதும் பாஜக அதிமுகவிடம் கெஞ்சி நிற்பது இனி இல்லை என்பதை காட்டுகின்றது. கிட்டத்தட்ட கூட்டணி விஷயத்தில் ஓரளவுக்கு ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள்.
அதாவது அதிமுகவுக்கு வேறு தேர்வு இல்லை. சிதறிக்கிடக்கும் அக்கட்சி வாழ்வா சாவா போராட்டத்தில் கிட்டத்தட்ட செத்துக் கொண்டிருக்கின்றது. ஆபத்தான அரசியலில் அவர்களுக்கு உயிர்கொடுப்பது பாஜகவின் வேலை அல்ல. அதனால் அதிமுக தாங்கள் வாழவேண்டும் என நினைத்தால் நம் பின்னால் வரட்டும் இல்லாவிட்டால் நமக்கொன்று நஷ்டமில்லை என முடிவெடுத்து விட்டார்கள்.
அவர்களுக்கு எந்த எதிர்பார்ப்புமில்லா தமிழகத்தில் கொஞ்சமும் அரசியல் அழுத்தமின்றி ஆடிபார்க்க துணிந்து விட்டார்கள். வந்தால் அண்ணாமலை போனால் எஸ்.விசேகர் என்ற அளவில் களமிறங்கி விட்டார்கள். இதனால் திமுகவுக்கு லாபம் என ஒரு சிலர் கிளம்பலாம், 39 எம்பிக்களை வைத்து திமுக என்ன செய்தது என்றால் ஒன்றுமில்லை. இனி இதுவே மக்களுக்கு ஒரு சலிப்பை உண்டாக்கி பாஜக பக்கம் மக்கள் கவனத்தை திருப்பும். ஒருவகையில் கட்சி வளரவும், கூட்டணி வந்தால் நல்லது வராவிட்டால் சிக்கலே இல்லை எனவும் ஆடிப்பார்க்க தயாராகி விட்டார்கள். எங்கள் தலைமையில் கூட்டணி அண்ணாமலை தமிழக பாஜகவின் அசைக்கமுடியா தளபதி. இனி இங்கு இதுதான் அரசியல் இனி இங்கே இப்படித்தான் நடக்கும் என தீவிரமாக இறங்கி விட்டார்கள்
தமிழக அரசியலில் டெல்லி தீவிரமாக இறங்கியது முன்பு நடந்தது. 1970களில் இந்திரா முதலில் தீவிரமாக இறங்கினார், முதலில் அடிவாங்கினார் பின் கடுமையாக களமிறங்க, அத்தோடு திமுகவின் சரணாகதி நடந்தது. வெள்ளை கொடி காட்டி தப்பினார் கருணாநிதி.
ஆனால் கட்சியினை வளர்க்க இந்திரா பெரும் முயற்சி செய்யவில்லை அப்படியே பின்வாங்கினார். அது ஏன் என்பது இன்றுவரை புரியவில்லை. அதன் பின் அரசியல் அனுபவமில்லா ராஜிவ் காந்தியினை ம.நடராஜன் தரப்பு மிக தவறாக வழிகாட்டி குழப்பி அடிக்க அவரும் கட்சியினை வளர்க்கவில்லை. மூப்பனாரின் எழுச்சியினை கூட சோனியா பயன்படுத்தவில்லை. அதனை திமுகவுக்கு சாதகமாகவே கலைத்து போட்டார்.
இப்பொழுது பாஜக களமிறங்குகின்றது. இவர்கள் அணுகுமுறை வித்தியாசமானது பல மாகாணங்களில் மெல்ல மெல்ல கட்சி வளர்த்து அசைக்க முடியாத இடத்தில் இருப்பவர்கள். பாறைக்குள் வேர்போல் ஊடுருவி நிற்பவர்கள். அப்படிபட்ட பாஜக இப்போது முடிவோடு களமிறங்குகின்றது, தாமதமானாலும் எதிர்காலம் அவர்களுக்குத்தான்.அதற்குத்தான் செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலர் அதிதீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.