தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை 27 கிமீ ஆறு வழி மேம்பாலம்
சென்னையில் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 27 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலடுக்கு பாலம் கட்டப்பட உள்ளது
சென்னைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் பல லட்சம் பேர் வருகிறார்கள். அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகளில் பயணிகள் ஆயிரக்கணக்கில் வருகின்றனர்.பொதுவாக இந்த பேருந்துகள் இரண்டு - மூன்று ரூட்களை பயன்படுத்துவது வழக்கம். பெருங்களத்தூர் வழியாக கிண்டி, வடபழனி என்று வருவது ஒரு வகை.
இரண்டாவது ஓஎம்ஆர் வழியாக கிண்டி, வடபழனி வழியாக கோயம்பேடு வருவது இன்னொரு பக்கம். கடைசியாக சில பேருந்துகள் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக பெருங்களத்தூர், மதுரவாயல் வழியாக செல்லும். இதனால் வடபழனி, கிண்டி செல்ல விரும்பும் பயணிகள் நேரடியாக செல்ல முடியாமல் கோயம்பேட்டில் இறங்கி செல்ல வேண்டி இருக்கும்.
கோயம்பேட்டில் இறங்கி மெட்ரோவிலோ அல்லது ஆட்டோ, பஸ்ஸிலோ செல்ல வேண்டி இருக்கும். இந்த போக்குவரத்து ரூட்கள் காரணமாக சென்னையில் தாம்பரம் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். பல கிலோ மீட்டர்களுக்கு கார்கள், பேருந்துகள் வரிசையில் நிற்கும் அளவிற்கு தாம்பரம், பெருங்களத்தூர் பாதை டிராபிக் ஜாம் ஆகும். இந்த நிலையில்தான் அங்கே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பல்வேறு பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
தாம்பரம் பாலம்: ஏற்கனவே தமிழ்நாடு அரசால் பெருங்களத்தூரில் பாலம் கட்டப்பட்டு வரும் நிலையில் சென்னையில் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 27 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆறுவழி மேலடுக்கு பாலம் கட்டப்பட உள்ளது. ரூ. 3,523 கோடியில் தாம்பரம்-செங்கல்பட்டு உயர்த்தப்பட்ட வழித்தட பாலத்திற்கான பணியை சில மாதங்களில் மத்திய அரசின் NHAI தொடங்க உள்ளது. இது 6 லேன்கள் கொண்ட வழித்தடம் ஆகும். பெருங்களத்தூரில் தொடங்கி பரனூர் டோல் பிளாசா தாண்டி இந்த பாலம் முடியும்.
தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 27 கிமீ நீளமுள்ள உயர்மட்ட பாலத்தின் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இங்கே சராசரியாக 1.53 லட்சம் வாகனங்கள் தினமும் பகல் நேரங்களில் மட்டும் செல்கின்றன என்பதால் இந்த பாலம் அவசியம் ஆகிறது. இந்த மேம்பாலத்தில் ஏறினால் எளிதாக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்ல முடியும். இடையே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், பொத்தேரி எஸ்ஆர்எம் கல்லூரி மற்றும் மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி ஆகிய இடங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகளை இந்த பாலம் கொண்டிருக்கும்.
இது போக ஜிஎஸ்டி சாலையின் 67.1 கிமீ நீளமுள்ள செங்கல்பட்டு-திண்டிவனம் பாதை, தற்போதுள்ள 4 வழிச்சாலையாக உள்ளது. இருபுறமும் சர்வீஸ் சாலைகளுடன் 8 வழிச்சாலையாக மேம்படுத்தப்படும். அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, 3,458 கோடி ரூபாய் செலவில் இந்த சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது.
ஏற்கனவே இங்கு கட்டப்பட்டு உள்ள பெருங்களத்தூர் பாலம் விரைவில் திறக்கப்பட உள்ளது. அதன்படி 1. தாம்பரத்தில் இருந்து வண்டலூர் வழியாக பாலம் 2. வண்டலூரில் இருந்து தாம்பரம் செல்லும் திசையில் பாலம் 3. சதானந்தபுரம், நெடுங்குன்றம் வழியாக வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை செல்ல பாலம் 4. பெருங்களத்தூர் ரயில்வே தண்டவாளத்தின் மேல்புறம் வழியாக பழைய பெருங்களத்தூர் பகுதிகளுக்குள் செல்ல பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் வண்டலூரில் இருந்து தாம்பரம் செல்லும் திசையில் பாலம் ஏற்கனவே திறக்கப்பட்டு விட்டது. கடந்த செப்டம்பர் மாதம் இந்த பாலம் திறக்கப்பட்டது. தாம்பரம்-வண்டலூர் சாலையின் இரு திசைகளிலும் இந்த 1.2 கி.மீ தூரத்துக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வந்த பாலத்தில் ஒரு பக்கம் பணிகள் முடிந்த நிலையில் இன்னொரு பக்கம் பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில்தான் பெருங்களத்தூர் ரயில்வே தண்டவாளத்தின் மேல்புறம் வழியாக பழைய பெருங்களத்தூர் பகுதிகளுக்குள் செல்ல பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாலத்தின் பணிகள் முடிந்துவிட்டன. இது விரைவில் திறக்கப்பட உள்ளது.