மெகா முகாமில் 15 இலட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு - அமைச்சர் மா.சு.
மெகா தடுப்பூசி முகாமில் 15 இலட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்றும் 2 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகின்றது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில், மெகா தடுப்பூசி முகாமை, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். முன்னதாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிராண வாயு உற்பத்தி அலகு அமைச்சர் துவக்கி வைத்தார். தொடர்ந்து முக கவசம் அணிவதன் முக்கியத்துவம் தொடர்பான குறும்படத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவாது: ஒரு கோடி மதிப்பீட்டில், மத்திய அரசு உதவியுடன் ஒரு பிராண வாயு அலகு உள்ளிட்ட 2 பிராணவாயு அலகு அமைக்கப்பட்டுள்ளது. 3வது அலை என்பதை எதிர்கொள்ளும் வகையில் இது இருக்கும். கடந்த காலங்களில் கொரோனா தொற்றால் பெரிய அளவிலான துனபத்தை அனுபவித்தோம். இதனால்தான், தமிழக முதல்வர் அவர்கள் 3 வது அலையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்.
ஆட்சி பொறுப்பில் அமர்வதற்கு முன்பு குறைவான தடுப்பூசிகளே போடப்பட்டன. இப்போது 2 அரை லட்சத்திற்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதல் தடுப்பூசி இந்தியா முழுவதும் 62 சதவீதமும், தமிழகத்தில் 40 சதவீதம் மட்டுமே இருந்த நிலையில், தமிழக முதல்வரின் அறிவுறுத்தலுக்கு இணங்க, மெகா தடுப்பூசி முகாம் மூலம் 58 சதவீதமாக உயர்ந்தது. முதல்வரின் கட்டளை படி மீண்டும் மெகா தடுப்பூசி முகாம், இன்று போடப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் முகாம்கள் மூலம், 15 லட்சத்திற்கு மேல் இன்று தடுப்பூசி போட உள்ளோம்.
38 மாவட்டங்களில், முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்ட மாவட்டங்களில் கோவை முதலிடத்தில் உள்ளது. ஆனால், தொற்று எண்ணிக்கையை பொறுத்த வரை மூன்று இலக்கத்தில் உள்ளது. கேரளாவில் தொற்று பெருகி கொண்டிருப்பதால், எல்லைப்பகுதியில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
கோவை மாவட்டத்தை பொறுத்த வரை மாநகராட்சி பகுதியில் 266 தடுப்பூசி முகாம்களும், ஊரக பகுதியில் 440 முகாம் என மாவட்டம் முழுவதும் 706 தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றது. மலைப்பகுதி மற்றும் கிராமப்புற பகுதி, கேரள மாநில எல்லைப்பகுதி ஆகிய முகாம்களில் அதிகளவில் தடுப்பூசி செலுத்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.