தென்னிந்திய அரசியல் பிக்பாஸ் ஆக உருவெடுப்பாரா தமிழக முதல்வர்..!?
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய தென்மாநிலங்களுக்கு அரசியல் பிக்பாஸ் ஆக உருவெடுப்பாரா தமிழக முதல்வர் ஸ்டாலின்.;
தமிழகத்தின் அரசியல் சூழலை இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்க்க வேண்டுமென்ற பேராவலில், முதல்வர் ஸ்டாலின் உள்ளார். வட மாநிலங்களில் இண்டி கூட்டணி கட்சிகளின் சீட் ஒதுக்கீட்டில் பிணக்கு ஏற்பட்டுள்ளது. வரும். ஆனால் வராது, என்ற பாணியில் மம்தா, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் காங்., க்கு சீட் ஒதுக்க தயாரில்லை.
ஆனால், கூட்டணி தொடரும் என்று அறிவித்துள்ளனர். அதுபோன்ற இக்கட்டான சூழல் தமிழகத்தில் இல்லை. இங்கு பெரியண்ணன் தி.மு.க., தான். காங்., கம்யூனிஸ்ட் போன்ற தேசிய கட்சிகள் தி.மு.க.,வின் தயவால் தான், தமிழகத்தில் எம்.பி., எம்.எல்.ஏ., தேர்தல்களில் வெற்றி பெறுகின்றன.
அவர்களுக்கு உள்ள ஓட்டு சதவீதம் குறைவு என்பதால் தனித்து நின்றால் டெபாசிட் கூட கிடைக்காது. அதே போன்ற பிராந்திய கட்சிகளில் விடுதலை சிறுத்தைகள் சற்று பலம் வாய்ந்தது. மற்றபடி ம.தி.மு.க., உட்பட சில கட்சிகளும் தி.மு.க., தயவால் மக்கள் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளன.
எவ்வளவு தான் மனக்கசப்பு, கொள்கை முரண் இருந்தாலும் அவை தி.மு.க.,வின் தயவின்றி தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்துள்ளதால் வரும் லோக்சபா தேர்தலில் தி.மு.க., கொடுக்கும் தொகுதிகளை பெற்று போட்டியிடும் நிலையில் உள்ளன. உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டுமென, தி.மு.க., நிர்ப்பந்திக்கவும் வாய்ப்புள்ளது.
வலிமையான கூட்டணியுடன் உள்ள சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த தி.மு.க., முன்வர வேண்டும். காங்.,க்கு தமிழகத்தில் ஒதுக்கப்படும் சீட்களின் எண்ணிக்கைக்கு இணையான தொகுதிகளை கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர போன்ற மாநிலங்களில் தி.மு.க., விற்கு ஒதுக்க, கார்கேவிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம். இதனால் அங்குள்ள தி.மு.க., மாநில நிர்வாகிகளுக்கு சீட் யோகம் கிடைக்கும்.
அதேபோல கம்யூனிஸ்ட்களுக்கு ஒதுக்கப்படும் சீட்களின் எண்ணிக்கையை ஈடுசெய்ய கேரளாவில் அதே எண்ணிக்கையில் தி.மு.க.,விற்கு சீட் ஒதுக்க கேட்கலாம். தமிழக எல்லையோர தொகுதிகள் தி.மு.க.,விற்கு சாதகமாக அமையும். இதனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் தென் மாநிலங்களின் அரசியல் ‘பிக்பாஸ்’ என்ற நிலைக்கு உயர்ந்து விடுவார். வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் கடந்த முறையை போன்றே வென்றால் ‘இந்திய அரசியலின் கிங்’ என்ற பட்டமும் கூட தமிழக முதல்வருக்கு கிடைக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
காரணம் தற்போதைய நிலவரப்படி பா.ஜ., வீழ்த்த முடியாத ஒரு அணி தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி மட்டுமே என்ற அரசியல் கணிப்புகள் உலாவந்து கொண்டுள்ளன. எனவே கூட்டணி கட்சிகளுடன் இணைந்து நான்கு மாநிலங்களில் வெற்றிகளை குவித்தால் முதல்வர், ஸ்டாலினின் ‘அரசியல் பெருந்தலைவர்’ அதாவது தென்னக அரசியலின் ‘பிக்பாஸ்’ என்ற எண்ணம் உறுதிப்படுத்தப்பட்டு விடும்.
இப்போது தமிழக முதல்வருக்கு நல்ல வாய்ப்பு லோக்சபா தேர்தலில் அமைந்துள்ளது. இந்த சூழலை ராஜதந்திமாக பயன்படுத்தி தனது அரசியல் பெருந்தலைவர் என்ற திட்டத்தில் தமிழக முதல்வர் வெற்றி பெறுவார் எனவும் தி.மு.க.,வினரும் கூறி வருகின்றனர். தேர்தலில் இதனை காணலாம்.
நன்றி: நிருபர் பவுன்ராஜ், தேவாரம், தேனி மாவட்டம்.