பாஜகவில் இருந்து விலகும் நிதின் கட்கரி? பின்னணி என்ன?

லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், நிதின் கட்கரி பெயர் மட்டும் பாஜக வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை.;

Update: 2024-03-15 05:14 GMT

நிதின் கட்கரி  

பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் நிதின் கட்கரி பெயர் இடம் பெறாதது குறித்து  மகாராஷ்டிர அரசியலில் பெரும் விவாதத்தையே கிளப்பியுள்ளது. லோக்சபா தேர்தலுக்கான பணிகளை பாஜக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதுவரை இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில் பல அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்று இருக்கிறது.

நிதின் கட்கரி:

இதற்கிடையே நிதின் கட்கரியை சுற்றி இதில் விவாதம் ஏற்பட்டுள்ளது. அதாவது பாஜக வெளியிட்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பெயர் இல்லை. மகாராஷ்டிராவைச் சேர்ந்த நிதின் கட்கரி பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவார். அவரது பெயர் இடம்பெறாத நிலையில், அது மகாராஷ்டிர அரசியலில் எதிரொலித்துள்ளது. அங்குள்ள தாக்ரே தரப்பு நிதின் கட்கரிக்கு ஆதரவாகக் கருத்துகளைக் கூறியுள்ளது.

இதற்கிடையே சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே மீண்டும் இது தொடர்பாகப் பேசியுள்ளார். அதாவது மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை பாஜக அவமானப்படுத்தினால் அவர் பாஜகவில் இருந்து வெறியேற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அப்படி அவர் வெளியேறினால், மகாராஷ்டிராவில் லோக்சபா தேர்தலில் அவரது வெற்றியை எதிர்க்கட்சிகள் உறுதி செய்யும் என்று அவர் கூறினார்.

தாக்ரே தாக்கு:

கிழக்கு மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தில் உள்ள புசாத் என்ற இடத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய தாக்ரே, "பாஜக ஒரு காலத்தில் ஊழல்வாதி என்று சொன்ன (முன்பு காங்கிரஸில் இருந்தவர்) கிருபாசங்கர் சிங் போன்றவர்கள் கூட பிரதமர் நரேந்திர மோடியுடன் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் உள்ளனர். ஆனால் நிதின் கட்கரியின் பெயர் இல்லை. இதை இரண்டு நாட்களுக்கு முன்பே நான் கட்கரியிடம் கூறியிருந்தேன். இப்போது மீண்டும் சொல்கிறேன்.

உங்களை அவமானப்படுத்துகிறார்கள் என்றால் நீங்கள் பாஜகவை விட்டு எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் சேருங்கள். உங்கள் வெற்றியை நாங்கள் உறுதி செய்கிறோம். எங்கள் அரசு ஆட்சிக்கு வந்ததும் நிச்சயம் உங்களை அமைச்சராக்குவோம், அதிகாரங்களுடன் கூடிய பதவியாக அது இருக்கும்" என்றார்.

பாஜக பதிலடி:

கடந்த வாரமே உத்தவ் தாக்ரே இதைக் கூறியிருந்த நிலையில், இப்போது மீண்டும் அதை வலியுறுத்தி உள்ளார். தாக்ரேவின் இந்த கருத்துக்கு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் கடுமையாக எதிர்வினையாற்றினார். அவர் கூறுகையில், "தாக்ரே இப்படிச் சொல்வது தெருவில் இருக்கும் ஒருவர் அமெரிக்க அதிபராக உங்களை முன்னிறுத்துகிறோம் எனச் சொல்வது போல இருக்கிறது. கட்கரி பெயர் வரும் லிஸ்டில் நிச்சயம் இருக்கும்" என்றார்.

நிதின் கட்கரி பாஜகவின் முக்கியத் தலைவராக இருக்கிறார். ஆனால், அவரது பெயர் வேட்பாளர் லிஸ்டில் இல்லை. மகாராஷ்டிராவில் இன்னும் தொகுதிப் பங்கீடு இறுதியாகாத நிலையில், அதை இறுதி செய்த உடன் வெளியாகும் லிஸ்டில் நிதின் கட்கரி பெயர் இடம் பெறும் எனத் தெரிகிறது.

சிஏஏ:

உத்தவ் தாக்ரே அந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் சிஏஏ குறித்தும் பேசினார். அவர் கூறுகையில், "சிஏஏ சட்டத்தை வரவேற்கிறோம். ஆனால், அவர்கள் இந்த நேரத்தில் அறிவித்துள்ளது சந்தேகத்தைத் தருகிறது. காஷ்மீரில் கூட பாருங்கள்.. அங்கே சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து 4 ஆண்டுகள் ஆகிறது. ஆனாலும், இன்னும் அங்கே தேர்தலை நடத்தவில்லை. முதலில் பாஜக காஷ்மீரி பண்டித்களை மீண்டும் அங்கே அழைத்து வர வேண்டும் பிறகு சிஏஏவை அமல்படுத்தலாம்.

தேர்தல் நெருங்கும் நிலையில் மற்ற மதங்களுக்கு இடையே பகையை உருவாக்கி, அரசியல் சட்டத்தை மாற்ற நினைக்கும் பாஜக ஒரு பக்கம் இருக்கிறார்கள். மறுபுறம் இந்தியாவைக் காக்க நினைத்தும் தேசபக்தர்களின் கூட்டணியான "இந்தியா" இருக்கிறது. இது நாட்டை நேசிப்பவர்களுக்கும் வெறுப்பைப் போதிப்பவர்களுக்கும் இடையேயான போட்டியாகும்" என்று அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News