2024ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடியை தோற்கடிப்பது யார்? (ஒரு அரசியல் அலசல்)
2024ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் பிரதமர் மோடியை தோற்கடிப்பது யார் என்ற கேள்வி தற்போதே அரசியல் களத்தில் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
2024ம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில் பிரதமர் மோடியை யார் தோற்கடிக்கப் போகிறார்கள் என்பதே தற்போதைய விவாதப் பொருள். ஆனால், அதற்கான விடையோ அல்லது முடிவோ எதிர்கட்சிகளிடம் எட்டப்பட்டதாக தெரியவில்லை. நாட்டில் உள்ள ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் மோடியை பதவியில் இருந்து தூக்கி வீசுவதே முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளனர். ஆனால், அதை எப்படி செய்வது? வழி நடத்துவது யார் என்ற பெரும் குழப்பத்திற்கான விடையும் அவர்களிடம் இல்லை.
எதிர்கட்சிகளுக்கிடையே ஒற்றுமை இல்லாததே இந்த குழப்பங்களுக்கு காரணம். மோடியை எதிர்ப்பதற்கு யாராவது ஒருவரை முன்னிறுத்த வேண்டும். அதில் ஒருமித்த கருத்து இல்லை. யாராவது ஒருவரை முன்னிறுத்த பலருக்கு விருப்பமில்லை. யாரை பிரதமராக முன்னிறுத்துவது என்பதில் எதிர்க்கட்சிகளுக்குள் போட்டாபோட்டி. இதில் மம்தா பானர்ஜிக்கும், ராகுல் காந்திக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த இருவரைத் தவிர, பிற மாநில தலைவர்களில் பலர் பதவிக்காகவே ரகசியமாக ஆலோசனை செய்கிறார்கள்.
மம்தா பானர்ஜி :
காலங்காலமாகவே மம்தா பானர்ஜி காங்கிரஸ் கட்சியைத் தாக்கி, காங்கிரஸை பலவீனப்படுத்தி, அங்குள்ள பல முக்கிய தலைவர்களை தனது கட்சியில் சேர்த்துக் கொண்டார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதனால், காங்கிரஸ் கட்சியினர் மம்தாவை எதிர்ப்பதுடன் பிரதமராக முன்மொழிவதை விரும்பவும் இல்லை. மம்தாவோ தன்னை காங்கிரசுக்கு மாற்றாக நினைக்கிறார். அதனால், அவர் திமுக, சமாஜ்வாடி,ராஷ்ட்ரீய ஜனதா தல், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஷிவ் சேனா போன்ற தலைவர்களுடன் பேசி வருகிறார்.
மேலும் அவர்களுடன் இணக்கமான நட்புணர்வு இருப்பதாக அவர் நம்புகிறார். இன்னும் அவருக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் எண்ணிக்கை கூடினால் தனக்கு பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் அவர் கருதுகிறார். தற்போதைய சூழ்நிலையில் மம்தாவை பொறுத்தவரை பா.ஜ.கவைவிட காங்கிரசுக்கு எதிராக காய் நகர்த்துவதையே பிரதானமாக கருதுகிறார். ஏனெனில் தான் பிரதமர் ஆவதை நேரடியாக எதிர்க்கும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. மம்தாவின் கூட்டணி கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் வாக்கு சதவீதம் அவருக்கான வெற்றியை தீர்மானிக்கும் அளவுக்கு மம்தாவுக்கு கைகொடுக்குமா என்பதும் கேளிவிக்குறியே. மேலும், மம்தா மேற்கு வங்கத்தை தாண்டி பிரபலமாக இல்லை என்பது அவருக்கான இன்னொரு பலவீனம்.
ராகுல் காந்தி :
அதேபோல கடந்த 2014ம் ஆண்டு முதலே ராகுல்காந்தி, மோடியைத் தோற்கடிக்க பெரிய அளவில் கடும் முயற்சி செய்தும், அதற்கு சிறிய அளவில் கூட வெற்றி கிடைக்கவில்லை என்பதை அவரே ஒப்புக்கொண்டதாகவே தெரிகிறது. அதன் வெளிப்பாடே காங்கிரஸ் தலைவர் பதவியில் நீடிக்காமல் விட்டது. மேலும் அவர் முதிர்ச்சியற்ற அரசியல்வாதியாக தெரிகிறார். ஒரு சிறந்த தலைமைக்கான அனுபவமும் முதிர்ச்சியும் அவரிடம் வெளிப்படவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ் பல மாநிலங்களை பாஜகவிடம் இழந்து வருவதையும் நாம் பார்க்கமுடிகிறது. காங்கிரஸ் அவரது கட்டுப்பாட்டில் இருந்து வெகு தொலைவுக்கு சென்றுவிட்டது போலவே தோன்றுகிறது. அவரது கட்சிக்குள்ளேயே பல கோஷ்டிப்பூசல்கள் இன்னும் நீறுபூத்த நெருப்பாக கசிந்துகொண்டேதான் உள்ளது. அதனால், அவராலும் மோடியை தோற்கடிக்க முடியாது.
மாநில கட்சிகள் :
சந்திரசேகர்ராவ், சரத்பவார், ஸ்டாலின், அகிலேஷ் யாதவ் போன்ற எந்த தலைவர்களுக்கும் மோடியை தோற்கடிக்கும் அளவுக்கான பலம் இல்லை. அவர்கள் மாநில கட்சிகள். மாநில நன்மைக்கு யார் முழுமையான ஒத்துழைப்பு தருகிறார்களோ அவர்களுக்கு மாநில கட்சிகள் கைகொடுக்கலாம். எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் அவரவர்களை முன்னிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று எண்ணுகின்றனரே தவிர, ஒத்த கருத்துடன் இணைய யாரும் தயாராக இல்லை. இந்த பலவீனம் ஒன்று போதும், மோடி வெல்வதற்கு.
பிரதமர் மோடி :
பிரதமர் மோடியின் ஒரு சிறந்த தலைமைக்கான பண்பு, முதிர்ச்சியான அணுகுமுறை, உலகளாவிய சிந்தனை, நாடுகளைப்பற்றிய வரலாற்று அறிவு என அவர் உயர்ந்து நிற்கிறார். ஆகவே,2024 தேர்தலிலும் மோடிக்கு எதிராக யாருக்கும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. அவரது பேச்சாற்றல், உலகத் தலைவர்களுடன் மோடி கொண்டுள்ள நட்பு, உலகத் தலைவர்கள் பிரதமர் மோடி மீது கொண்டுள்ள மரியாதை இவையெல்லாம் அவரை சர்வதேச அளவிலான தலைவராக உயர்த்தியுள்ளதை யாரும் மறுத்துவிட முடியாது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும்போது 2024 தேர்தலிலும் மோடிக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
(இந்த கருத்துக்கள் கட்சிகளுக்கு சாதகமாக கூறுவதற்கல்ல. அரசியல் களத்தில் நிலவும் தற்போதைய சூழலின் அடிப்படையில் இன்ஸ்டாநியூஸின் ஒரு அரசியல் அலசல், அவ்வளவே.)