தமிழகத்தின் தலைநகரை திமுக தக்கவைத்துக் கொள்ளுமா..!?

தமிழகத்தின் தலைநகர் சென்னை, திமுகவின் கோட்டை என மீண்டும் நிரூபித்து காட்டுமா..? தேர்தல் முடிவு நாளை எதிர்பார்த்து திக்..திக்.. மனதுடன் வாக்காளர்களும்.

Update: 2024-04-02 12:16 GMT

கோப்பு படம் 

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து பிரதான கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தின் ஒட்டுமொத்த பார்வையும் ஒரு குறிப்பிட்ட பகுதியின் மீது விழ தொடங்கியுள்ளது.காரணம் அது தமிழகத்தின் தலைநகரம்.

பல லட்சம் வாக்காளர்களைக் கொண்ட சென்னை மாநகரம் தான் அது. இந்த முறை மக்களவைத் தேர்தலில் சென்னையில் இருக்கும் 3 தொகுதிகளான வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை என அனைத்திலுமே திமுக களமிறங்கி உள்ளது.

புயல் பாதிப்பு, போக்குவரத்து நெருக்கடி, தற்போது பேருந்து நிலையம் கோயம்பேட்டில் இருந்து மாற்றியது என சென்னை மக்களுக்கு பல பிரச்சினைகள் இருந்தாலும் திமுக அனைத்தையும் சமாளித்து நாங்களே களம் காண்கிறோம் , சென்னை திமுகவின் கோட்டை என நிரூபிக்கிறோம் என நேரிடையாக திமுக வேட்பாளர்களை அறிவித்து களம் காண்கிறது.

வடசென்னை மக்களவை தொகுதி ஒரு பார்வை

பழைய மெட்ராஸ் என்று அழைக்கப்படும் வடசென்னை மக்களவை தொகுதி தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளில் வடசென்னை 2 ஆவது தொகுதியாகும். தொழிற்சாலைகளும், மீன்பிடித் தொழிலும் செழித்தோங்கும் வட சென்னை தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 2008 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் திருவொற்றியூர், ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே நகர்), பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க நகர், இராயபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இந்த மக்களவைத் தொகுதியில் உள்ளன.

ஒட்டுமொத்த சென்னையும் தி.மு.க.,வின் கோட்டை என்று கூறப்படும் நிலையில், அதிலும் குறிப்பாக வடசென்னை தி.மு.க.,வின் கோட்டையாகவே திகழ்ந்து வருகிறது. இதுவரை இந்தத் தொகுதியில் 16 முறை தேர்தல் நடந்துள்ள நிலையில், அதில் 11 முறை தி.மு.க நேரடியாக போட்டியிட்டு வென்றுள்ளது. இதில் இரண்டு தேர்தல்கள் தி.மு.க தோன்றுவதற்கு முன் நடந்தவை, அப்படி பார்தோமேயானால் 14 தேர்தல்களில் 11 முறை தி.மு.க வென்று, தொகுதியில் அசைக்க முடியாத சக்தியாக உள்ளது. எம்.ஜி.ஆராலும் தி.மு.க.,வை வீழ்த்த முடியாத தொகுதியாக வடசென்னை இருந்துள்ளது. அ.தி.மு.க இந்த தொகுதியில் ஒரே ஒரு முறை மட்டுமே வென்றுள்ளது. அதுவும் அ.தி.மு.க தமிழகம் முழுவதும் 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற 2014 தேர்தலில் தான்.

வடசென்னை தொகுதியில் 1957ல் தான் முதல் தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் காங்கிரஸை எதிர்த்து லோகியா சோசலிஸ்ட் கட்சி சார்பில் சுயேட்சையாக போட்டியிட்ட அந்தோனிப்பிள்ளை வெற்றி பெற்றார். அவர் தொழிற்சங்க தலைவராக இருந்தவர். அடுத்து 1962ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

இதனைத்தொடர்ந்து வடசென்னை தொகுதி தி.மு.க.,வின் கோட்டையாக மாறியது. 1967 தேர்தலில் தி.மு.க வேட்பாளர் மனோகரன் வெற்றி பெற்றார். 1971, 1977, 1980, 1984 என தொடர்ச்சியாக 5 தேர்தல்களில் தி.மு.க வெற்றி பெற்றது.

1989 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தா.பாண்டியன் வெற்றி பெற்றார். 1991 தேர்தலிலும் மீண்டும் காங்கிரஸின் தா.பாண்டியன் வெற்றி பெற்றார்.

பின்னர் 1996 தேர்தலில் தொகுதி மீண்டும் தி.மு.க வசமானது. 1996, 1998, 1999, 2004, 2009 என தொடர்ச்சியாக 5 தேர்தல்களில் தி.மு.க வெற்றி பெற்றது. இதில் மூன்று முறை வெற்றி பெற்று குப்புசாமி எம்.பி.,யானார். 2009 தேர்தலில் தி.மு.க மூத்த தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார்.

2014 தேர்தலில் தான் முதன்முறையாக இந்தத் தொகுதியில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலில் தமிழகம் முழுவதும் ஜெயலலிதா அலை வீசியது, இதனால் தமிழகத்தில் 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை அ.தி.மு.க வென்றது. அந்த சமயத்தில் வடசென்னை தொகுதியிலும் அ.தி.மு.க வென்றது.

பின்னர் 2019 தேர்தலில் தொகுதியை மீண்டும் தி.மு.க கைப்பற்றியது. இந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சரும், மூத்த தி.மு.க தலைவருமான ஆற்காடு வீராசாமியின் மகன் டாக்டர் கலாநிதி வீராசாமி களமிறங்கினார். அவரை எதிர்த்து அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க வேட்பாளர் மோகன் ராஜ் களமிறங்கினார். கலாநிதி வீராசாமி கிட்டதட்ட 48% வாக்குகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றார்.

தற்போது திமுக சார்பாக கலாநிதியும், பாஜக சார்பில் பால் கனகராஜ், அதிமுக சார்பில் இராயபுரம் மனோ போட்டியிடுகிறார்கள்.

மத்திய சென்னை மக்களவை தொகுதி ஒரு பார்வை

தமிழகத்தின் தலைநகரின் மத்தியில் அமைந்துள்ள மத்திய சென்னை தொகுதி இதுவரை நடந்த 12 தேர்தல்களில் 8 ல் தி.மு.க.,வே வென்றுள்ளது. தமிழகத்தின் மிகச் சிறிய மக்களவைத் தொகுதிகளில் ஒன்றான மத்திய சென்னை , தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளில் மத்திய சென்னை 4 ஆவது தொகுதியாகும். மத்திய சென்னை தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 2008 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் மத்திய சென்னை தொகுதியில் இடம் பெற்றிருந்த பூங்கா நகர், புரசைவாக்கம் ஆகிய தொகுதிகள் நீக்கப்பட்டு, வில்லிவாக்கம் மற்றும் துறைமுகம் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி, அண்ணா நகர், ஆயிரம் விளக்கு ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

1977 தேர்தலில் தான் மத்திய சென்னைத் தொகுதி உருவானது. முதல் தேர்தலில் ஸ்தாபன காங்கிரஸ் வெற்றி பெற்றது. இரண்டாவது தேர்தல் முதல் தி.மு.க ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 1980 தேர்தலில் தி.மு.க வேட்பாளர் கலாநிதி வெற்றி பெற்றார். 1984 தேர்தலிலும் தி.மு.க வேட்பாளர் கலாநிதியே வெற்றி பெற்றார்.1989 தேர்தலில் காங்கிரஸ் தொகுதியை மீண்டும் கைப்பற்றியது. 1989 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அன்பரசு வெற்றி பெற்றார். 1991 தேர்தலிலும் காங்கிரஸின் அன்பரசு வெற்றி பெற்றார்.

1996 தேர்தலில் தொகுதி மீண்டும் தி.மு.க வசமானது. மத்திய சென்னை தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் வெற்றி பெற்றார். முரசொலி மாறன் அடுத்தடுத்து நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று ஹாட்ரிக் அடித்தார். முரசொலி மாறன் 1996, 1998, 1999 ஆகிய 3 தேர்தல்களிலும் வென்றார்.

2004 தேர்தலில் முரசொலி மாறன் மகன் தயாநிதி மாறன் முதன்முறையாக களமிறங்கினார். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி ஆன தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் ஆனார். மீண்டும் 2009 தேர்தலிலும் தயாநிதி மாறன் வெற்றிப் பெற்று மத்திய அமைச்சர் ஆனார்.

2014 தேர்தலிலும் மீண்டும் தயாநிதி மாறன் மத்திய சென்னை தொகுதியில் களமிறங்கினார். ஆனால் இந்தத் தேர்தலில் தான் அ.தி.மு.க முதன்முறையாக மத்திய சென்னை தொகுதியில் வென்றது.

2019 தேர்தலில் தொகுதி மீண்டும் தி.மு.க வசம் வந்தது. இந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் மீண்டும் தயாநிதி மாறன் களமிறங்கினார். தமிழகம் முழுவதும் தி.மு.க கூட்டணிக்கு சாதகமாக இருந்தநிலையில், சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தயாநிதி மாறன் வென்றார்.

இந்த முறை திமுக சார்பாக தயாநிதி மாறன், பாஜக சார்பில் வினோஜ் செல்வம், தேமுதிக சார்பில் பார்த்தசாரதி போட்டியிடுகிறார்கள்.

தென் சென்னை மக்களவை தொகுதி ஒரு பார்வை

தமிழ்நாட்டின் மூன்றாவது மக்களவை தொகுதியாக தென் சென்னை இருக்கிறது. கடந்த 1957ல் உருவாக்கப்பட்ட இந்த தென் சென்னை மக்களவை தொகுதியானது இதுவரை 17 முறை தேர்தலை சந்தித்துள்ளது. இதில், ஒரு இடைத்தேர்தல் அடங்கும். அதுமட்டுமில்லாமல், சென்னையில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளில் அதிக வாக்காளர்களை கொண்ட மிகப்பெரிய தொகுதி தென் சென்னை தான்.

இந்த தென் சென்னை தொகுதி உருவாக்கப்பட்டு 51 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2008 ல் தொகுதி மறுசீரமைக்கப்பட்டது. அதிலிருந்து, தென் சென்னை மக்களவை தொகுதியில் விருகம்பாக்கம், சைதாபேட்டை, தியாகராய நகர், மைலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் இணைக்கப்பட்டது.

தமிழகத்திலேயே அதிக வாக்காளர்கள் இருக்கும் சட்டமன்ற தொகுதி எது என்றால், அது தென் சென்னையில் இருக்கும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி தான். இதனாலே தென் சென்னையில் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இந்த தொகுதியில் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில், அதற்கேற்ப வெளி மாநிலத்தவர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கின்றனர்.

பல்வேறு மத வழிபாட்டு தலங்கள், சுற்றுலாப் பகுதிகள், ஐஐடி உள்ளிட்ட சிறந்த கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் போன்றவை இருப்பதால், தென் சென்னை முழுவதும் பெரிய கட்டடங்கள் மற்றும் பெரிய பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளாகவே காணப்படும்.

இன்னும் சொல்லப்போனால் தென் சென்னையில் மக்களவை தொகுதியில் உள்ள வேளச்சேரி, தியாகராய நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பிராமணர்கள் அதிகளவில் வசித்து வந்தாலும், பலதரப்பட்ட மக்ககளும் வசித்து வருகின்றனர்.

இதுவரை 17 முறை தேர்தலை சந்தித்துள்ள தென் சென்னை மக்களவை தொகுதியில் அதிக முறை வெற்றி பெற்று இங்கையும் திமுகதான் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.

அதன்படி, தென் சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக 8 முறையும், காங்கிரஸ் 5 முறையும், அதிமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக நிறுவனருமான அண்ணா என்ற அண்ணாதுரை அவர்கள் நாடாளுமன்றத்திற்கு தேர்வானது இந்த தென் சென்னை தொகுதியில் இருந்து தான். இதுபோன்று வைஜயந்திமாலா பாலி உள்ளிட்ட பிரபலங்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2019ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது, தென் சென்னை தொகுதியில், திமுக தமிழச்சி தங்கப்பாண்டியன் வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலில் திமுக சார்பில் தமிழச்சி, பாஜக சார்பில் தமிழிசை, அதிமுக சார்பில் ஜெயவர்தன் போட்டியிடுகிறார்கள்.

குறிப்பாக சென்னையில் இந்த தொகுதி விஐபி தொகுதியாக மாறியுள்ளது, காரணம் தற்போதைய திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், பாஜக சார்பில் தமிழிசை சௌந்தர்ராஜன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தனன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

தமிழகத்தின் தலைநகரம் சென்னை திமுகவின் கோட்டையாக மாறுமா என்பது ஜூன் நான்காம் தேதி தெரிந்துவிடும். இந்த விடைக்காக தமிழக மக்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Tags:    

Similar News