அண்ணாமலை பெற்ற வெற்றிகள் : பட்டியலிடும் பா.ஜ.க...!
என்ன? தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்து விட்டதே! உங்களது அண்ணாமலையாரது கதை என்னாகப் போகிறது?;
அண்ணாமலை இந்த தேர்தலில் வெற்றிபெறுவாரா என்ற இந்த கேள்வி தமிழ்நாடு முழுவதும் எழுந்துள்ளது. இதற்கு பா.ஜ.க.,வினர் தரும் பதில்கள் பிரமிக்க வைக்கின்றன.
இது குறித்து தேனி பா.ஜ.க., வர்த்தக அணி மாவட்ட தலைவர் ஜெயராம் நாடார் கூறியதாவது:
இம்முறை நாடு முழுவதும் நடந்து வரும் தேர்தலில் வெற்றி யாருக்கு என்பது மக்கள் முடிவு செய்து விட்டார்கள். முதல் கட்ட ஓட்டுப்பதிவு மட்டுமே முடிந்துள்ளதால், எங்களுக்கு தேர்தல் முடிவுகள் குறித்து சில நம்பிக்கைகள் இருந்தாலும் ஊடகங்களில் வெளிப்படையாக பேசக்கூாடது. இதனால் தேர்தல் முடிவுகளை பற்றி நான் பேசப்போவதில்லை. ஆனாலும் இந்த தேர்தலில் அண்ணாமலை பெற்ற வெற்றிகளை பற்றி பேசித்தான் ஆக வேண்டும். அண்ணாமலை ஏற்கனவே பெரும் வெற்றிகளைப் பெற்று விட்டார். அது என்ன வெற்றிகள் என்று கேட்பீர்கள் சொல்கிறேன்.
மிகக் குறுகிய காலத்தில் தனது ஆளுமையால் தன்னையும், தனது கட்சியையும் தமிழ்நாட்டுக்குள் பிரபலப்படுத்தியதில் முதல் வெற்றியை பெற்று விட்டார். தமிழகத்தில் ஒரு திராவிட கட்சிக்கு, மற்றொரு திராவிட கட்சி தான் எதிரணியாக இருக்க முடியும் என்ற வரலாற்றை மாற்றி எழுதி விட்டார். தமிழகத்தில் உள்ள அத்தனை கட்சிகளையும் தன்னை நோக்கித் திருப்ப வைத்தது அவர் பெற்ற இரண்டாவது வெற்றி.
அ.தி.மு.க. உடனான கூட்டு தன் கட்சிக்குப் பெரிய வாய்ப்பைப் பெற்றுத்தரும் என்பதைத் தெரிந்து கொண்டும் தன் கட்சியின் சுயசார்பினை வலுப்படுத்துவதற்காக அ.தி.மு.க.வுடனான உறவை முறித்துக் கொண்டது அவர் பெற்றிருக்கும் மூன்றாவது வெற்றி.
பெரும்பான்மையான கட்சிகள் தமக்கு வாக்களிக்கவெனச் சட்டத்தை மீறி மக்களுக்கு பணம் ‘பட்டுவாடா’ செய்து வெற்றி பெற்று வந்த நிலையிலும் “எங்கள் கட்சிக்கு வாக்களிக்க பணம் தரமாட்டேன் என உறுதி கூறியதோடு, மிகவும் தைரியமாக அதனை செய்து காட்டி பணம் இல்லாத தேர்தலை நடத்தி முடித்திருப்பதும், நேர்மையான தேர்தல் என்ற விவகாரத்தில் அவரது உறுதிச் செயல் பெற்றிருக்கும் நான்காவது வெற்றி.
ஊடகக்காரர்களுடன் ஒத்துப் போனால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற சூழ்நிலை இருக்கையில் சில அராஜகமான ஊடகக்காரர்களைச் சிறிதும் அச்சமின்றித் துவைத்தெடுத்த செயல் அவர் பெற்றிருக்கும் ஐந்தாவது வெற்றி.
பாரதப் பிரதமரின் கவனத்தை முற்று முழுதாகத் தமிழின் மீதும், தமிழ்நாட்டின் மீதும் திசை திருப்பியிருப்பது அவர் பெற்ற ஆறாவது வெற்றி. எம்.ஜி.ஆருக்குப் பிறகு மக்களின் கருத்தை முழுமையாக ஈர்த்திருப்பது அவர் பெற்றிருக்கும் ஏழாவது வெற்றி.
எம்.ஜி.ஆரின் வெற்றிக்குக் கூட அவரது சினிமா பலம் தேவைப்பட்டது. அதுவரை அவர் பயணித்து வந்த கட்சியில் ஏற்பட்ட ஈர்ப்பும், மரியாதையும் எம்.ஜி.ஆருக்கு துணையாய் நின்றன. ஆனால் எங்கிருந்தோ திடீரென வந்து தன் தனித்துவமான செயல்பாடுகளால், இத்தனை கோடிப் பேரை தன் வசம் ஈர்த்திருப்பது அண்ணாமலைக்கு கிடைத்திருக்கும் எட்டாவது வெற்றி.
எந்தவித பிரதியுபகாரமும் பெற்றுக் கொள்ளாமல் இலட்சக்கணக்கான இளைஞர்கள் அண்ணாமலை வெற்றிக்காகவும், பா.ஜ.க., வெற்றிக்காகவும் உழைக்க முன்வந்திருப்பது அவர் பெற்றிருக்கும் ஒன்பதாவது வெற்றி.
தமிழ்நாட்டு அரசியலில் பல காலமாய்க் காணாமல் போயிருந்த சத்தியம், தர்மம், நேர்மை என்பவற்றை மீண்டும் மக்களிடம் கொண்டு வந்து கொடுத்திருப்பது அண்ணாமலை பெற்றிருக்கும் பத்தாவது வெற்றி.
“அரசியல் இல்லாமல் போனால் ஆடு மேய்க்கப் போவேன்” எனக்கூறி ‘‘வேண்டாமை எனும் விழுச் செல்வம் பெற்று நிமிர்ந்து நிற்பது’’ அவர் பெற்றிருக்கும் பதினோராவது வெற்றி. திராவிடர் கழகங்களை எதிர்க்கப் பயந்து வாய்மூடி இருந்த பலரைப் பொது மேடையில் துணிந்து வாய்திறக்கச் செய்திருப்பது அவர் பெற்ற பன்னிரண்டாவது வெற்றி.
இப்படியாய் அவர் பெற்றிருக்கும் வெற்றிகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த வெற்றியோடு ஒப்பிடும் போது, வரப்போகும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் போகும் வெற்றி மிகச் சிறியதென்றே கருதுகிறேன்.
வல்லவன் நல்லவனாய் இல்லை. நல்லவன் வல்லவனாய் இல்லை. இரண்டுமாய் அண்ணாமலை இருப்பது அதிசயம் தான். வாழ்க பாரத அன்னை. இவ்வாறு கூறினார்.