வருவாளா,மகாலட்சுமி..? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க..!
60 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட காங்., பெண்களின் கல்வி, தொழில், பொருளாதார, வேலை வாய்ப்பு முன்னேற்றத்திற்கு எதுவும் செய்யவில்லை.;
பெண்களின் கல்வி, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு குறித்து பாரதீய ஜனதா கட்சியின் மருத்துவப்பிரிவு நிர்வாகி டாக்டர் பாஸ்கரன் எம்.டி.எஸ்., கூறியதாவது:
காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அக்கட்சியின் தேர்தல் அறிக்கை பற்றிய விவரங்களை வெளியிட்டு வருகிறார். அதில் பெரும்பாலான திட்டங்கள் பெண்களின் ஓட்டுக்களை குறி வைத்தே வடிவமைக்கப்பட்டுள்ளன. அதுபற்றி பார்க்கலாம்.
மல்லிகார்ஜூன கார்கே ஒரு படி மேலே போய் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாயா...? ஆண்டு தோறும் ஒரு லட்சம் ரூபாயா? ஏழைப்பெண்கள் என்றால் எந்த மாதிரி கணக்கீடு என்பது பற்றிய விவரங்கள் இடம் பெறவில்லை.
ஏனென்றால் கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை என அறிவித்து விட்டு, அமல்படுத்தும் போது, தகுதியுள்ள குடும்பத்தலைவி என அறிவித்த குழப்பம் இப்போது வரை தீரவில்லை. இதனால் தான் காங்., கட்சியின் இந்த அறிவிப்பினை தொடக்கத்திலேயே தெளிவுபடுத்த வேண்டும்.
ஆண்டுக்கு ஒரு லட்சம் கொடுப்பது, கிட்டத்தட்ட வேலை செய்யாத ஒருவருக்கு மாதந்தோறும் சம்பளம் கொடுப்பதற்கு ஈடானது. இந்தியாவில் 70 கோடி பெண்கள் உள்ளனர். இதில் ஏழைகள் என்றால், வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களா? வறுமைக்கோட்டுக்கான அளவீடு என்ன? இதில் வயது வரம்பு உள்ளதா? எப்படியிருந்தாலும் குறைந்தது 35 கோடிப்பேருக்காவது கொடுக்க வேண்டும்.
அப்படியானால் 35 கோடி ஒரு லட்சம் ரூபாய் என்பதை எத்தனை ஆண்டுகளில் கொடுப்பீர்கள். தேர்தல் நேரம் தெளிவுபடுத்தாமல், மக்களை ஏமாற்ற வாக்குறுதிகளை அள்ளி விட்டு, பெண்களை ஏமாற்றி ஓட்டு வாங்க முயற்சிப்பது விஷமத்தனமானது. எனவே காங்., கட்சியினர் மட்டுமின்றி இன்டியா கூட்டணி கட்சியினர் யார் வந்தாலும், இது பற்றிய தெளிவான விவரங்களை மக்கள் கேட்க வேண்டும். ஓட்டுப்போடும் முன்பே உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள். ஒட்டுப்போட்ட பின்னர் ஏமாற வேண்டாம். அதன் பின்னர் கேட்டாலும் பலன் இருக்காது.
அடுத்து வேலைக்கு செல்லும் பெண்களுக்காக மாவட்டத்துக்கு ஒரு விடுதி அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். 60 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்., இதற்கு முன் ஏன் அதனை செய்யவில்லை. மத்திய அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன 50 சதவீதம். தற்போது போட்டித்தேர்வுகள் மூலம் தானே அரசு பணி நியமனம் நடக்கிறது.
போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்றால் 100 சதவீதம் கூட பெண்களை நியமனம் செய்யுங்களேன். படித்த பெண்கள் வேலைக்கு வந்தால் நல்லது தானே. அப்போது தானே ஆண்களும் தங்களுக்கும் அரசு வேலை வேண்டும் என கவனமாக படிக்கத் தொடங்குவார்கள். படிப்பவர்களின் கனவில் இன்னும் ஏன் மண்ணை போடுகிறீர்கள்.
ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு என்ன வேலை வழங்கப்படும்? எவ்வளவு சம்பளம் வழங்கப்படும்? தற்போது உள்ள பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் என்ற பதவிகள் அனைத்தும் காங்., கட்சியில் உருவானது தான். கிராம வளர்ச்சிக்கு உருவாக்கப்பட்ட இத்தனை பதவிகளும் வீணாகிப்போனது என அக்கட்சியே முடிவு செய்து விட்டதா?
இப்படி மக்களை மூளைச்சலவை செய்யும் திட்டங்கள் எல்லாவற்றையும் விட நாட்டின் வளர்ச்சிக்காக பெண்களின் வளர்ச்சிக்கு அவர்களின் கல்வி, தொழில், பொருளாதார முன்னேற்றத்திற்கு நிரந்தரமாக என்ன செய்ய முடியும் என்று கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள். இன்னும் பெண்களை கையேந்தும் நிலைக்கு தள்ள முயற்சிக்காதீர்கள்.
அவர்களை வாங்கும் இடத்தில் இருந்து கொடுக்கும் இடத்திற்கு கொண்டு வர ஏதாவது திட்டங்கள் இருந்தால் சொல்லுங்கள் காங்., நண்பர்களே..! பெண்களின் முன்னேற்றத்திற்கு கடந்த 10 ஆண்டில் பா.ஜ.க., செய்ததை காங்., செய்ய அக்கட்சிக்கு இன்னும் 60 ஆண்டுகள் கொடுத்தாலும் பத்தாது.
கடந்த 10 ஆண்டு பா.ஜ.க., ஆட்சியில் எத்தனை கோடி பெண் தொழில் முனைவோர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர் என்ற விவரங்களை கேட்டு வாங்குங்கள். உங்களுக்கே தலை சுற்றி விடும். எத்தனை லட்சம் பெண்களை பா.ஜ.க., வறுமையில் இருந்து மீட்டுள்ளது. எத்தனை லட்சம் பெண்களை சுய சார்பு உடையவர்களாக மாற்றி உள்ளது என்பதை பற்றி நாங்கள் தெள்ளத்தெளிவாக எங்கள் பிரசாரத்தில் சொல்கிறோம் கேளுங்கள் நண்பர்களே. ஏமாற்றுத்திட்டங்களை விட்டு விட்டு உண்மையான வளர்ச்சி திட்டங்களை பற்றி பேசுங்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.