காப்பி அடிக்கும் வேகம் செயல்படுத்துவதில் தேவை: பட்ஜெட் குறித்து கமல்
மக்கள் நீதிமய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கையை காப்பி அடிக்கும் வேகத்தை, திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு காட்டியிருக்க வேண்டும் என்று, கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின், 2022-23ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். இது குறித்து, மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், டிவிட்டர் மூலம் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
சட்டமன்றத் தேர்தலின் போதும், உள்ளாட்சித் தேர்தலின்போதும் மகளிர் உரிமைத் தொகையை வழங்குவதில் உறுதியாக இருக்கிறோம் என்று முழங்கியது திமுக. கடந்த பட்ஜெட்டில், உரிமைத் தொகையைப் பெறுவதற்கு உரிய பயனாளிகளைக் கண்டுபிடித்து வழங்குவோம் என்று அடக்கி வாசித்தது.
இன்றைய பட்ஜெட் உரையில், "நிதி நிலைமை மேம்பட்டதும் மகளிர் உரிமைத் தொகை கொடுக்கப்படும்" என்று மழுப்பலாகப் பேசி வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு அப்பட்டமாக மகளிரை ஏமாற்றியுள்ளது திமுக. மகளிர் உரிமைத் தொகையை முதலில் முன்வைத்த மநீமவின் வாக்குறுதியைக் காப்பியடிக்கக் காட்டிய வேகத்தில் சிறிதளவாவது அதனைச் செயல்படுத்துவதில் காட்டியிருந்தால் மகளிர் உரிமைத் தொகை இன்று சாத்தியமாகியிருக்கும்.
வாக்குகளை வாங்குவதற்காகக் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றப்படும் என்று நம்பி ஏமாற வேண்டாம் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறது திமுக. திமுக மாறவில்லை.. மக்கள்தான் மாறவேண்டும் " என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.