I.N.D.I கூட்டணி உடைய காரணம் தேய்ந்து கட்டெறும்பான காங்.,

காங்கிரஸ் கட்சி தேய்ந்து போனதும், வலுவான கொள்கைகள், தலைவர்களிடையே ஒருங்கிணைப்பு இல்லாததே I.N.D.I கூட்டணி உடைய காரணம்.

Update: 2024-02-03 03:26 GMT

இந்தி கூட்டணியில் இருந்து நிதீஷ்குமாரும் அவுட் ஆகி வெளியேறி விட்டார்...

இந்தி கூட்டணியை முதலில் ஆரம்பித்த ஒருங்கிணைப்பாளர் அவர் தான். இந்தி கூட்டணி தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பெரியளவில் வாக்குகளை பெற்றுத்தரப்போவதுமில்லை, பெரிய அதிர்வை ஏற்ப்படுத்தப்போவதும் இல்லை என்றாலும் நித்திஷ்குமாரின் வெளியேற்றம் நிச்சயம் அந்த கூட்டணிக்கு பின்னடைவு தான்... மம்தா வேறு காங்கிரஸ் எங்களுக்கு சரிபடாது என சொல்லி விட்டார். பவார் ஒன்றும் சொல்ல முடியாமல் உள்ளார்.

இந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் காங்கிரசை அல்லது அதன் இன்றைய தலைமையை எதிர்த்து உருவானவை. சரத்பவாரின் (என்சிபி), மம்தாவின் (டி.எம்சி) ஆகியவை காங்கிரஸ் தலைமையை எதிர்த்துக் காங்கிரசில் இருந்தவர்கள் வெளியேறி உருவாக்கியவை.

ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட் ரிய ஜனதா தளம், கம்யூனிஸ்ட்கள், திமுக, சிவசேனா, லாலு, பஸ்வான, நிதிஷ், முலாயமின் சமாஜ்வாதி, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் காங்கிரஸை எதிர்த்துத் தோன்றியவை.

காங்கிரசையும் கம்யூனிஸ்ட்களையும் ஆம் ஆத்மியையும் தவிர மற்ற கட்சிகள் பாஜகவோடு இருந்தவை. சிபிஎம் - காங்கிரஸ் கூட்டு என்பது சரிவரவே வராத விஷயம். சமரசங்கள் செய்து வெற்றி பெறும் கூட்டணியில் தங்கள் சுய நலனை (பதவி - சம்பாத்தியம்) மனதில் கொண்டு மாநில நலன் என உதட்டு அளவில் உதடு கோடு புன்னகையில் பட்டும் படாமல் சொல்வார்கள். பேரம் பேசும் வலிமை தாங்கள் பெறும் எம்பிக்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே இருக்கும் என இவர்கள் தெரிந்து கொண்டு, காங்கிரஸ் கட்சிக்கு சீட்டுக்களை வழங்க உள்ளனர்.

ஒரே ஒரு சௌகர்யம்.. இனி திமுக ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பது மட்டும் தான். பீகார், டில்லி, இரண்டும் 2025ல், தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளம், அசாம், புதுச்சேரி 2026ல் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கின்றன. காங்கிரஸை தலைமையாக கொண்ட கூட்டணி தெளிவான வலிமையாக பேருக்குதான் இருக்க முடியும்.

ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த உத்தர பிரதேசத்தில் இன்றைய காங்கிரசின் நிலைமை குறித்து ஒரு மீள்பார்வையைச் செய்ய வேண்டி இருக்கிறது . மோதிலால் நேரு காலம் தொட்டு ஜவஹர்லால் நேரு, பந்த் , கிருபாளனி, குப்தா காலம் வரை தொடர்ந்து இந்திரா காந்தி கமால பதி திரிபாதி, எச். என். பகுஹனா பலர் வரைக்கும் ஒரு ஒரு குடும்ப அழகியலிலின் செவ்வியிலாக அதுவே சுதந்திரத்திற்கு பிறகான மக்களின் நம்பிக்கைக்கு உரிய அரசு அதிகாரத்தின் முன்னெடுப்பாக இந்த மாபெரும் மாநிலம் ஆன உத்திரபிரதேசம் தொடர்ந்து இயங்கி காங்கிரசின் அதிகார நலம் சார்ந்த கோட்டையாக இருந்ததை யாரும் மறந்து விட முடியாது. பின் சரன்சிங் இதை மாற்றினார்.

தீர்மானமாகச் சொன்னால் இந்திய அரசியலில் உத்தரப்பிரதேசத் தேர்தல் வெற்றி தான் ஒட்டுமொத்த காங்கிரசின் பரிமாணத்திற்கு அதன் வளர்ச்சிக்கு அடிப்படையாக வரலாற்றில் இருந்தது.

ஏறக்குறைய 90 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்யும் மிகப் பரந்த மாநிலம் அது. நாடாளுமன்றத்தின் வெற்றி வாய்ப்பில் ஏறக்குறைய 30 சதவீதம். அந்த வகையில் கடந்த காலம் முழுக்க நேரு குடும்பத்தின் மீதான அபிமானத்தின் வழியே எப்போதும் காங்கிரஸ் தான் அங்கு நிலையான ஒரு அரசியல் கட்சியாக இருந்தது.

ஆனால் இன்றைய நிலைமையில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சியின் துணையோடு தங்களுக்கு 11 இடம் கொடுத்தால் போதும் என்கிற நிலையில் காங்கிரஸ். ஒரு அரசியல் விமர்சகர் என்கிற முறையில் எனது கவலைக்குரிய விஷயங்களில் ஒன்று இது.

காலங்களும் காட்சிகளும் மாறி வருகிற காலத்தில் அகில இந்திய காங்கிரஸ் எப்படி தேய்ந்து கட்டெறும்பாகிப் போனது. தமிழ்நாட்டில் திராவிட ஆட்சிகள் எத்தனை முறை ஆட்சியை பிடித்தாலும் மக்களுக்கு காங்கிரஸ் மீது ஒரு ரகசியமான காதல் 2009 வரை இருந்தது. அது ஈழத்தமிழர் விவகாரத்தில் சிதைந்து போய் விட்டது என்பது எனது வருத்தத்துக்குரிய விஷயங்களில் ஒன்று. ஆக, இந்தி கூட்டணியில் இன்றைய நிலை.

1.மேற்கு வங்காளத்துல மம்தாதனித்து போட்டி.

2. பஞ்சாப், டில்லில கேஜரிவால் தனித்து போட்டி.

3.கேரளத்துல சிபிஎம் விஜயன் எதிர்த்து போட்டி.

4. உ.பில் பெகன் ஜி, அகிலேஷ் ஓரமா போட்டி.

அடுத்தாப்புல, நிதிஷ்குமாரும் கணக்கை முடித்து விட்டார். லாலு மற்றும் காஷ்மீர் குடும்பங்கள் வகையறா, கோபாலபுரம் குடும்பம் என்ன செய்ய போகிறதோ, பார்ப்போம்.

நன்றி: கே.எஸ்.ராதாகிருஷ்ணன், அரசியலாளர்

குறிப்பு : கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் அரசியல் நோக்கருடையதே.

Tags:    

Similar News